

பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆண்-பெண் ஒன்றாக இணைந்து உணவு உண்பது, இஸ்லாத்திற்கு விரோதமானது என உ.பி.யின் தியோபந்த் மதரஸா ஃபத்வா (சட்ட விளக்கம்) அளிக்கப்பட்டுள்ளது. விருந்துகளில் நின்று கொண்டு உணவு உண்பதற்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை எனவும் அந்த ஃபத்வாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் உள்ள முஸ்லிம் நிகழ்ச்சிகளில் அளிக்கப்படும் விருந்துகளில் நவீன காலத்திற்கேற்ப மாற்றம் நிகழத் தொடங்கியுள்ளது. முஸ்லிம் பெண்களிடம் பர்தா முறை இருப்பதால் அவர்களுடன் ஒன்றாக இன்றி, ஆண்களுக்குத் தனியாக விருந்து இடம் அமைக்கப்பட்டு வந்தது. இந்த தனி இடங்களில் இருதரப்பினரும் நாற்காலியில் அமர்ந்து தம்முன் உள்ள மேசைகளில் உணவுத்தட்டை வைத்து உண்டு வந்தனர். இதுபோன்ற நிலை சமீபகாலமாக மாறத் தொடங்கியுள்ளது.
பல விருந்துகளில் நின்றபடி உண்ணும் ‘பஃபே’ முறையும், அதில் ஆண், பெண் இணைந்து உணவு உண்பதும் நிகழ்ந்து வருகிறது. இந்த நவீன முறையை இஸ்லாம் அனுமதிக்கிறதா என்ற ஐயப்பாட்டை எழுப்பிய உ.பி.வாசி, அங்குள்ள தியோபந்தின் தாரூல் உலூம் மதரஸாவில் அதன்மீது ஃபத்வா விளக்கம் கோரியிருந்தார்.
இந்த ஃபத்வாவிற்கு மதரஸாவின் உலமாக்கள் அளித்த பதிலில் குறிப்பிடுகையில், ''திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் ஆண், பெண் இருவரும் இணைந்து உணவு உண்பதற்கு இஸ்லாத்தில் இடம் இல்லை. இதுபோன்ற விருந்துகளில் நின்றபடி உண்பதும் தவறானது என்பதால் அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உ.பி.யின் தியோபந்தில் அமைந்துள்ள மிகப்பழமையான தாரூல் உலூம் மதரஸா முஸ்லிம் நாடுகள் இடையே மிகவும் மதிக்கப்படுகிறது. இங்கு இஸ்லாமியர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டி ஃபத்வா துறை தனியாக செயல்படுகிறது.
இங்கு அளிக்கப்படும் ஃபத்வாக்களில் சில, சர்ச்சைகளை உருவாக்கி விடுவதும் வழக்கமாக உள்ளது. இந்த வகையில், வங்கிகளில் முஸ்லிம்கள் பணியாற்றுவதும், அவர்கள் பெண்கள் தம் புருவங்களை திருத்தி அமைப்பதும் இஸ்லாத்திற்கு விரோதமானவை என கடந்த ஜனவரியிலும் அதற்கு பின்பாகாவும் அளிக்கப்பட்ட ஃபத்வாக்கள் சர்ச்சையாயின.