ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி இந்தியில் உரை

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி இந்தியில் உரை
Updated on
1 min read

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியில் பேசுவார் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ‘இந்தி திவாஸ்’ விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ராஜ்நாத் பங்கேற்று பேசும்போது, “ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியில் பேசிய முதல் பிரதமர் என்ற பெருமை வாஜ்பாயையே சேரும். இந்நாட்டின் அமைச்சராக நானும் ஒருமுறை ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியில் பேசியிருக்கிறேன். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியில்தான் பேசவிருக்கிறார்.

வெளிநாடுகளில் இருந்து வரும் தலைவர்களை சந்திக்கும்போது பிரதமர் இந்தியில்தான் பேசி வருகிறார்” என்றார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் செப்டம்பர் 27-ம் தேதி மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவில் ராஜ்நாத் மேலும் பேசும்போது, “நாட்டின் 55 சதவீத மக்கள் இந்தி பேசுகின்றனர். தங்கள் தாய்மொழியாக இல்லாதபோதும் 85 – 90 சதவீத மக்கள் இந்தியை புரிந்துகொள்கின்றனர். பாலகங்காதர திலகர், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, மகாத்மா காந்தி, என்.கோபாலசுவாமி ஐயங்கார் போன்ற தலைவர்கள் தங்கள் தாய்மொழி வேறாக இருந்தாலும் இந்தியை பரவலாக்க விரும்பினர். நாட்டின் பொதுவான மொழி இந்தி. நாட்டின் அனைத்து மொழிகளுக்கும் சமஸ்கிருதம் தாயை போன்றது. இந்தியும் பிற மாநில மொழிகளும் சகோதரிகள்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in