

கடந்த 2004-ம் ஆண்டு குஜராத் போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் இஷ்ரத் ஜஹான்(19), ஜாவித் ஷேக் (எ) பிரணேஷ் பிள்ளை, ஜீஷன் ஜோஹர், அம்ஜத் அலி ராணா ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது போலி என்கவுன்டர் என்று சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு உறுப்பினரான மோகன் ஜா என்பவர் சாட்சிகளை மிரட்டியதாக பிரணேஷ் பிள்ளையின் தந்தை கோபிநாத் பிள்ளை புகார் தெரிவித்திருந்தார்.
அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “மோகன் ஜா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஹெச்.எல்.தத்து, எம்.ஒய்.இக்பால், எஸ்.ஏ.பாப்தே அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. “இதுகுறித்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பார்த்த பின், வழக்கு தொடரலாம்” என்று கூறி, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.