

பிரதமர் மோடி இரு இந்தியாவை உருவாக்கி இருக்கிறார், ஒன்று அனில் அம்பானிக்கானது, மற்றொன்று விவசாயிகளுக்கானது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயம் கிலோ ஒரு ரூபாய்க்கு விலைக்கு எடுக்கப்பட்டதால், ஆத்திரம் அடைந்து, அதில் கிடைத்த ரூ.1,040 ரூபாயைப் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக விவசாயிகள் சென்றிருனர். அந்தச் சம்பவம் நடந்த சில நாட்களில் விவசாயி ஒருவர் விரக்தியில் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். அவர் அதில் கூறியதாவது:
பிரதமர் மோடி இரு இந்தியாவைவை உருவாக்கியுள்ளார். ஒன்று சாமானிய விவசாயிகளுக்கானது, மற்றொன்று ஒன்றுமே செய்யாத அனில் அம்பானிக்கானது. விமானமே தயாரிக்காமல் ரபேல் போர்விமான ஒப்பந்தத்தைப் பெற்று ரூ.30 ஆயிரம் கோடி கொடுத்துள்ளார்.
மற்றொரு இந்தியா விவசாயிகளுக்கானது. 750 கிலோ வெங்காயத்தை விளைவித்து 4 மாதங்களுக்குப் பின் அவருக்கு ரூ.1.040 மோடியிடம் இருந்து கிடைத்துள்ளது. இவ்வாறு ராகுல் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் நலனில் அக்கறை இல்லாமல் மத்திய அரசு செயல்படுகிறது என்று காங்கிரஸ் கட்சி மோடி தலைமையிலான அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறது. ஆனால், காங்கிரஸின் விமர்சனங்களை மறுத்துவரும் பாஜக தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகளுக்குச் செய்துள்ள பல்வேறு திட்டங்களையும் சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.