

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் துணிச்சலான முடிவு எடுத்திருக்கிறார்கள். வேண்டாதவர்களை மக்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள் என்று பாஜகவின் தோல்வி குறித்து சிவசேனா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கையும் முடிந்துள்ளது. இதில் பாஜக சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களிலும் ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுத்துள்ளது. மிசோரத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது. தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி 2-வது முறையாக ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில், 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்துள்ளது குறித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள மக்கள் நாட்டுக்கு புதிய பாதையைக் காட்டி விட்டனர். ஆட்சியிலிருந்து தங்களுக்கு வேண்டாதவர்களை அகற்ற மக்கள் துணிந்துவிட்டனர். மக்களின் துணிச்சலான முடிவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள 5 மாநிலங்களிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீதான சர்ச்சைகள், வாக்காளர்களுக்கான பண விநியோகம், குண்டர்கள் அச்சுறுத்தல், அதற்கு மாற்று என்ன போன்ற எந்தவொரு காரணத்தையும் கருத்தில் கொள்ளாமல் ஆளும் கட்சியை மக்கள் நிராகரித்துள்ளனர். தங்களுக்கு வேண்டாதவர்களை மக்கள் தூக்கி எறிந்துவிட்டனர். வாக்காளர்களின் இந்தத் துணிச்சல் தேசத்துக்கு புதிய பாதையைக் காட்டி இருக்கிறது.
தேர்தல்களில் அரசியல் கட்சிகள் வெற்றி - தோல்வியைச் சந்திப்பதும், வெற்றியாளர்கள் வாழ்த்தப்பட வேண்டியதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால், இந்த 5 மாநில தேர்தல்களில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடக்குமுறை அரசின் மீது விழுந்த அறை
மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாத் தலைவர் ராஜ் தாக்கரே கூறுகையில் “ 5 மாநிலத் தேர்தல் முடிவுகள், அடக்குமுறையை கையாளும் அரசின் முகத்தில் விழுந்த அறையாகும். தனிமனிதராக இருந்து போராடி, பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். இதேபோன்ற வரவேற்பை, முடிவைத்தான் குஜாரத் தேர்தலிலும் அந்த மாநில மக்கள் எடுத்தனர். குஜராத் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். மோடியையும், அமித் ஷாவைம் குஜராத் மக்களே நிராகரிக்கத் தொடங்கிவிட்டனர்” எனத் தெரிவித்தார்.