

வைர வியாபாரி கொலை வழக்கு தொடர்பாக பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகையிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையை சேர்ந்த வைர வியாபாரி ராஜேஸ்வர் உதானி (57). கடந்த நவம்பர் 28-ம் தேதி முதல் இவரை காணவில்லை. இதுதொடர்பாக மும்பை பாண்ட் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 4-ம் தேதி மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்ட வனப்பகுதியில் ராஜேஸ்வர் உதானியின் சடலம் மீட்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சச்சின் பவார், தினேஷ் பவார் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் சச்சின் பவார் மாநில அமைச்சர் ஒருவரின் நேர்முக உதவியாளர் ஆவார். தினேஷ் பவார் மாநில காவல் துறையில் காவலராக பணியாற்றி வருகிறார்.
பெண் விவகாரம் தொடர்பாக வைர வியாபாரி ராஜேஸ்வர் உதானி கொலை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
நடிகையுடன் தொடர்பு
இந்தப் பின்னணியில் இந்தி தொலைக்காட்சி துறையின் பிரபல நடிகை தேவோலினா பட்டாச்சாரியாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கும் கொலைக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை.
எனினும் வைர வியாபாரி ராஜேஸ்வர் உதானிக்கும் நடிகை தேவோலினாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகக் கூறப்படு கிறது. இந்த விவகாரம் இந்தி சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.