

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் விஜயவாடா அருகே அமைக்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு சட்ட சபையில் வியாழக்கிழமை அறிவித்தார்.
ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொது தலை நகரமாக 10 ஆண்டுகள் வரை ஹைத ராபாத் இருக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திராவுக் காக புதிய தலைநகரைத் தேர்ந்தெடுக்க சிவராமகிருஷ்ணன் குழுவை மத்திய அரசு நியமித்தது. இந்தக் குழு ஆகஸ்ட் 28-ம் தேதி தனது 187 பக்க அறிக் கையை அரசிடம் தாக்கல் செய்தது.
இதுகுறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து புதிய தலைநகரம் குறித்து முதல்வர் சந்திர பாபு நாயுடு ஆந்திர சட்டசபையில் வியாழக்கிழமை 20 பக்க அறிக்கையை தாக்கல் செய்தார். மாநிலத்தின் மையப்பகுதியில் தலைநகரம் அமைய வேண்டும் என்பதற்காக விஜய வாடா அருகில் புதிய தலைநகரம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
இதற்கு முன்னதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தலைநகர் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தியதால் 15 நிமிடங்கள் சபை ஒத்திவைக்கப்பட்டது.
முதல்வர் சந்திரபாபு நாயுடு மாநில தலைநகர் குறித்து தனது அறிக்கையில் தெரிவித்ததாவது:
* விஜயவாடா அருகே மாநிலத்தின் புதிய தலைநகரம் அமைக்கப்படும்.
* திருப்பதி, விஜயவாடா, விசாகப் பட்டினம் ஆகிய மூன்று நகரங்கள் மெகா நகரங்களாகவும் இந்த நகரங்க ளில் சர்வதேச விமான நிலையமும் அமைக்கப்படும்.
* ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் 14 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும்.
* ஆந்திர மாநிலத்தில் புதிதாக 7 விமான நிலையங்கள் அமைக்கப்படும். 14 துறைமுகங்கள் உருவாக்கப்படும்.
* ஸ்ரீகாகுளம் மாவட்டத்துக்கு புதிய விமான நிலையம், இரண்டு துறைமுகங்கள் கட்டப்படும்.
* விசாகப்பட்டினத்தில் மெட்ரோ ரயில், எலக்ட்ரானிக் உதிரிப் பாகங் கள் தயாரிப்பு தொழிற்சாலை, தகவல் தொழில்நுட்ப மையம் உருவாக்கப்படும்.
* கிருஷ்ணா மாவட்டத்தில் தற்போதைய கன்னாவரம் விமானநிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்படும், மசூலிப்பட்டினம் துறை முகம் மேம்படுத்தப்படும், மெட்ரோ ரயில் திட்டம், டெக்ஸ்டைல் பார்க், சுற்றுலாத்துறை மேம்பாடு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* குண்டூரில் மெட்ரோ ரயில், விவசாய பல்கலைக்கழகம், எய்ம்ஸ் மருத்துவ மனை, டெக்ஸ்டைல் பார்க், துறைமுகம் ஆகியவை அமைக்கப்படும்.
* பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோலில் விமான நிலையம், தொழிற் சாலை நகரம் மற்றும் துறைமுகம் உருவாக்கப்படும்.
* சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதியில் சர்வதேச விமான நிலை யம், மெட்ரோ ரயில் திட்டம், குப்பம் பகுதியில் விமான நிலையம், தகவல் தொழில்நுட்ப மையம், பழம் பதனிடும் தொழிற்சாலை, ஐ.ஐ.டி., அப்பல்லோ மருத்துவ மையம் அமைக்கப்படும்.
* கடப்பாவில் சிமென்ட் தொழிற் சாலைகள், இரும்பு தொழிற் சாலை, சோலார் மின் உற்பத்தி, காற்றாலை, விமான நிலைய மேம்பாட்டு பணிகள், உருது பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இவ்வாறு சந்திர பாபு நாயுடு தெரிவித்தார்.
தலைநகர் வளர்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சட்டசபையில் ஒருமன தாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.