

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு முக்கிய தகவல்களை அளித்த அருண் செல்வராஜன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தென் மாநிலங்களில் உள்ள ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த மையங்கள், விமான நிலையங்கள், வெளிநாடு களின் தூதரகங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் முன்பு பணியாற்றிய ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை அதிகாரி அமிர் ஜுபைர் சித்திக்கிற்கு, இந்தியாவின் தென் பகுதியில் உள்ள ராணுவ முகாம்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள், துறைமுகங்கள் தொடர்பான தகவல்களை அளித்ததாக தமீம் அன்சாரி, ஜாகீர் ஹுசைன் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ. உளவாளி
இந்நிலையில், ஐ.எஸ்.ஐ. அமைப்பின் உளவாளியாக செயல்பட்டதாக இலங்கையைச் சேர்ந்த அருண் செல்வராஜன் என்பவரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) சில நாட்களுக்கு முன்பு சென்னையில் கைது செய்தது. அவரிடமிருந்து கடலோரக் காவல் படை அலுவலக வளாகம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை சார்ந்த கட்டிடங்களின் வரைபடங்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை கைப் பற்றப்பட்டன. அவற்றை பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கு அளிப்பதற்காக வைத்திருந்தார் என விசாரணையில் தெரியவந்தது.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளரான அருண் செல்வ ராஜனை இலங்கை அரசு ஏற்கெனவே தேடி வருவதாக தெரியவந்துள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த கேந்திரங்கள் பற்றிய தகவல்களை சேகரித்து, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்த அமிர் ஜுபைர் சித்திக்கிற்கு அருண் செல்வராஜன் அனுப்பிவைத்ததும் தெரியவந்தது. இதற்கு ஷாஜி என்பவர் தனக்கு உதவியதாக அருண் செல்வராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் நிறுவனம்
கடந்த 2011-ம் ஆண்டு சென்னைக்கு வந்த அருண் செல்வராஜன், ‘ஈவன்ட் மேனேஜ்மென்ட்’ நிறுவனம் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார்.
கடலோரக் காவல் படை சார்ந்த நிகழ்ச்சி ஒன்றையும் அவரது நிறுவனம் ஏற்பாடு செய்து தந்துள்ளது. அப்போதுதான் அந்த அலுவலகம் தொடர்பான வரைபடத்தை அவர் தயாரித்துள்ளார் என தெரியவந்துள்ளது. தற்போது அருண் செல்வராஜன் நீதி மன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அருண் செல்வராஜனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது.
கண்காணிப்பு தீவிரம்
ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் தொடர்ந்து பிடிபட்டு வருவதைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறை சார்ந்த அலுவல கங்கள், முகாம்கள், வெளிநாடுகளின் தூதரக அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
அருண் செல்வராஜனைப் போன்று, வேறு யாரேனும் உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின் றனரா என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள், போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.