

சபரிமலைக்கு செல்ல முயன்ற 2 பெண்கள், பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, ஐயப்பனை தரிசிக்காமலேயே திரும்பினர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்தது. இதை நீக்கி அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்த கேரள அரசு தயாராக உள்ளது. ஆனால், இந்த உத்தரவுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட சில அமைப்புகளும் பக்தர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இதனால் இதுவரை சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள் யாரும் ஐயப்பனை தரிசிக்க முடியவில்லை.
சென்னையைச் சேர்ந்த ‘மனிதி’ அமைப்பைச் சேர்ந்த பெண்கள் 11 பேர் நேற்று முன்தினம் அதிகாலை பம்பை சென்றடைந்தனர். அவர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் நிலவியது. சுமார் 10 மணி நேரத்துக்குப் பிறகு அந்த பெண்கள் ஐயப்பனை தரிசிக்காமலேயே சென்னை திரும்பினர்.
இந்நிலையில் கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த பிந்து மற்றும் கோழிக்கோடு நகரைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரண்டு பெண்கள் நேற்று அதிகாலை 4 மணியளவில் பம்பை சென்றடைந்தனர். அங்கிருந்து சபரிமலையை நோக்கி சென்றனர். அவர்களை அப்பச்சிமேடு பகுதியில் பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். ஆனால் பக்தர்களை அப்புறப்படுத்திய போலீஸார் அந்த 2 பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். எனினும், கோயிலுக்கு 1 கி.மீ. முன்னதாக உள்ள மரக்கூடம் பகுதியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அந்த பெண்களை தடுத்து நிறுத்தி சரண கோஷம் எழுப்பினர்.
200 பேர் மீது வழக்கு
இதனால் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சுமார் 1 மணி நேரம் பதற்றம் நிலவியது. எனினும், போராட்டக்காரர்கள் அனுமதிக்க மறுத்ததையடுத்து, அந்த பெண்களை திரும்பிச் செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர்கள் ஐயப்பனை தரிசிக்காமலேயே வீடு திரும்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, அந்த 2 பெண்களின் வீட்டுக்கு முன்பு பாஜகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மலையேறிச் செல்லும்போது கனகதுர்காவுக்கு மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை அவருடன் சென்ற பிந்து மறுத்துள்ளார். அத்துடன் சபரிமலைக்கு செல்வதைத் தடுப்பதற்காகவே இந்த நாடகத்தை அரங்கேற்றினர் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கோயில் நடை திறக்கப்பட்டது. இதில் மண்டல பூஜை வரும் 27-ம் தேதி முடிய உள்ளது குறிப்பிடத்தக்கது.