

காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்திய ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில், ஜம்முவின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் வெளியானது. இதனை அடுத்து அந்த மாவட்டத்தின் மலையோரப் பகுதியில், ராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த மாவட்டத்தில் உள்ள ஹன்ஜான் கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மறைந்து இருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புத் துறையினர் பதிலடி கொடுத்தனர்.
இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது குறித்து பாதுகாப்பில் ஈடுப்பட்ட அதிகாரி கூறும்போது, "நேற்று இரவு நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள், கிராமத்தில் வீடு ஒன்றில் மறைந்து கொண்டு பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதனால் நாங்கள் கிராமத்தை முழுவதுமாக சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினோம். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்படவில்லை. இதனால் புல்வாமாவில் உள்ள மக்களிடம், அவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம்" என்றார்.