

மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி எழுதிய, ‘நவீன தென்னிந்தியா’ என்ற நூல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 2002-ல் அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக நியமிக்கலாம் என சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் முன்மொழிந்தார். அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கலாமை குடியரசுத் தலைவராக நியமிக்க ஒப்புக் கொண்டார். காங்கிரஸ் தலைவர் சோனியாவும் இதற்கு ஆதரவு அளித்தார். கலாம் குடியரசுத் தலைவரான பிறகு அனைவராலும் எளிதில் அணுகக் கூடியவராக இருந்தார். இதனால் 2007-ல் அப்பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் மக்கள் குடியரசுத் தலைவராக விளங்கினார்.
இந்நிலையில், கடந்த 2012-ல் பிரதிபா பாட்டீலுக்குப் பிறகு, அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக நியமிக்க பாஜக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் விரும்பின. ஆனால், இதற்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவளிக்க மறுத்துவிட்டன. இதனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்த கலாம், போட்டியிட விரும்பவில்லை என தெரிவித்துவிட்டார். இதையடுத்து பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.