Last Updated : 31 Dec, 2018 10:36 AM

 

Published : 31 Dec 2018 10:36 AM
Last Updated : 31 Dec 2018 10:36 AM

மாநிலங்களவையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல்: அதிமுகவின் நிலைப்பாடு என்ன?

மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதில், அதிமுக எதிர்த்து வாக்களிக்குமா அல்லது வெளிநடப்பு செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று மதியம் 2 மணிக்கு மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் மசோதாவிற்கும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடந்த முறையை போலவே இந்த புதிய மசோதாவையும் நாடாளுமன்ற தேர்வுக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

இதன் காரணமாக, முத்தலாக் மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேறுமா என்ற ஆவலை எழுப்பியுள்ளது. இதுபோன்ற சமயங்களில் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அதிமுக, இன்று என்ன செய்யும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் நேற்று பேசிய அதிமுகவின் மூத்த தலைவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை, முத்தலாக் மசோதாவை முழுமையாக எதிர்ப்பதாகக் கூறியுள்ளார். இஸ்லாமிய சகோதரர்களுக்கு அதிமுக அரணாக இருக்கும் என்றும் தம்பிதுரை தெரிவித்துள்ளார். ஆனால், இந்த எதிர்ப்பை வாக்களித்து தெரிவிப்பார்களா? அல்லது மறைமுகமாக ஆதரவளிக்கும் வகையில் வெளிநடப்பு செய்வார்களா? என அவர் தெளிவாகக் கூறவில்லை.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திடம் அதிமுக எம்.பி.க்கள் வட்டாரம் கூறும்போது, ''பாஜக, அதிமுக என இருவருக்கும் பிரச்சினையின்றி வெளிநடப்பு செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இதுவே எங்களுக்கு கடைசி நேரத்தில் சென்னையில் இருந்து உத்தரவாக வரும் என எதிர்பாக்கிறோம்'' எனத் தெரிவித்தனர்.

மாநிலங்களவையில் பாஜகவிற்கும் தனிமெஜாரிட்டி இல்லை. இதன் கூட்டணிகளுடன், அதிமுக வாக்களித்தாலும் மசோதா நிறைவேற வாய்ப்பில்லை. ஏனெனில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்கு 93, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 112 உறுப்பினர்கள் உள்ளனர்.

பிஜு ஜனதா தளத்தின் நிலைப்பாடு

இதனிடையே, அதிமுகவைப் போல் பாஜகவுடன் நட்பு கொண்ட எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளத்தின் 10 உறுப்பினர்கள் மக்களவையில் வெளிநடப்பு செய்திருந்தனர். மாநிலங்களவையில் இன்று சூழலைப் பொறுத்து முடிவு எடுக்க உள்ளதாக அக்கட்சி ஆளும் ஒடிசா மாநில நிதித்துறை அமைச்சர் சசி பூஷண் பெஹ்ரா கூறியுள்ளார்.

மைத்ரேயன் வரவில்லை

அதிமுகவின் மொத்தம் 13 உறுப்பினர்களும் இன்று அவையில் கட்டாயமாக ஆஜராக அக்கட்சியின் கொறடாவான விஜிலா சத்யானந்த் உத்தரவிட்டுள்ளார். பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு வந்தவரான உறுப்பினர் மைத்ரேயன் இன்று டெல்லிக்கு வரவில்லை எனத் தெரியவந்துள்ளது. அவர், தனது சகோதரியின் உடல்நலக் குறைவு என்பதை காரணமாகக் கூறி உள்ளார். .

உச்ச நீதிமன்ற தடை

முஸ்லிம்கள் இடையே ஒரே சமயத்தில் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியான தீர்ப்பை அடுத்து, மத்திய அரசு சட்டம் இயற்ற முயல்கிறது.

எதிர்ப்பாக வெறும் 11 வாக்குகள்

கடந்த வருடம் இறுதியில் தாக்கல் செய்ய முயன்றபோது செய்ததைப் போலவே, மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மக்களவையில் 245 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட மசோதா, மாநிலங்களவையில் முடியாமல் போனது. வெறும் 11 வாக்குகள் எதிர்ப்பாக விழுந்தன.

வெளிநடப்பு செய்த அதிமுக

இதனால், மூன்று முக்கியத் திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் புதிதாக முத்தலாக் மசோதா நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிகிறது. இந்த மசோதா, கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கடுமையாக எதிர்த்துப் பேசிய அதிமுக எம்.பி.க்கள்  வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்திருந்தனர்.

தேர்வுக்குழு ஒன்றே வழி

இந்நிலையில், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் முத்தலாக் மசோதா, தேர்வுக் குழுவிற்குப் பரிந்துரைக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் தெரிகின்றன. இவ்வாறு செய்வதைத் தவிர பாஜகவிற்கு வேறு வழிகள் இல்லை எனக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x