Last Updated : 13 Dec, 2018 12:24 PM

 

Published : 13 Dec 2018 12:24 PM
Last Updated : 13 Dec 2018 12:24 PM

காங்கிரஸ் தொண்டர்களின் கருத்தை கேட்டு முதல்வர் குறித்து முடிவு செய்யப்படும்: ராகுல் காந்தி பேட்டி

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநிலங்களில் முதல்வகள் குறித்து காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோரிடம் கருத்துக்களைக் கேட்டு முடிவு செய்யப்படும் என்று அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி, காங்கிரஸ் அரியணை ஏறுகிறது. ஆனால், இந்த 3 மாநிலங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்குப்பின் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது என்பதால், முதல்வராக யாரைத் தேர்வு செய்வது என்பதில் பெரிய குழப்பம் நீடிக்கிறது.

மத்தியப்பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் பெயருக்கு கமல் நாத், ஜோதிராதித்ய சிந்தியா பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் மூத்த தலைவர் அசோக் கெலாட், ராகுல் காந்திக்கு நெருக்கமானவரும் இளம் தலைவருமான சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருப்பவர்களான கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா, ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருக்கும் சச்சின் பைலட், அசோக் கெலாட் ஆகியோர் இன்று காலை டெல்லிவந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே ராஜஸ்தான் மாநிலத்தின் கட்சிப் பார்வையாளரான கே.சி. வேணுகோபால், மத்தியப்பிரதேச பார்வையாளர் ஏ.கே. அந்தோணி ஆகியோர் நேற்று அந்தந்த மாநிலங்களில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது அவர்களிடம் யாரை முதல்வராகத் தேர்வு செய்வது குறித்து கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.

கே.சி. வேணுகோபாலும், ஏ.கே.அந்தோணியும் இன்று காலை டெல்லி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ராகுல் காந்தியிடம் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் கருத்துக்களையும், தொண்டர்கள் கருத்து குறித்தும் தெரிவித்து, ஆலோசனை நடத்துவார்கள். அதன்பின் ராகுல் காந்தி இறுதியாக முதல்வர் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனத் தெரிகிறது.

இந்நிலையில் டெல்லியில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ 3 மாநிலங்களில் முதல்வர் யார் என்பது குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள், கட்சியின் தொண்டர்கள் உள்பட மற்றவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் முதல்வர் யார் என்பது தெரியும். விரைவில் முதல்வரைக் காண்பீர்கள்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைத்தமைக்காக, ராகுல் காந்தியின் நன்றி அறிவிப்பு, கடந்த 24 மணிநேரத்தில் 7.3 லட்சம் தொண்டர்களை செல்போன்கள் வாயிலாகச் சென்று அடைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர்களிடம் முதல்வர் யார் என்பது குறித்து ஒருவரின் பெயரை மட்டும் பரிந்துரைக்கவும் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

ராகுல் காந்தியின் நன்றி அறிவிப்புக்குப்பின், பீப் என்ற ஒலி எழுப்பப்பட்டவுடன் தொண்டர்கள் தங்களுக்குப் பிடித்த முதல்வர் யார் என்பது குறித்த ஒருவரின் பெயரை மட்டும் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x