சபரிமலை போராட்டம்: ஐயப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் கைது

சபரிமலை போராட்டம்: ஐயப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் கைது
Updated on
1 min read

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்வதை தடுத்து போராட்டம் நடத்தியது தொடர்பாக ஐயப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் கைது செய்யப்பட்டார்.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துக் கடந்த செப்டம்பர் மாதம் 28-ம்தேதி தீர்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் கேரள மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாகப் போராட்டம் நடந்து வருகிறது, இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டுள்ளது. அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சபரிமலையில் போலீஸார் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு 144-தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது.

போலீஸாரின் பல்வேறு கெடுபிடிகளால், மகரவிளக்கு சீசன் தொடங்கியும் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது, கடந்த சில நாட்களாக மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இருப்பினும், 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை சபரிமலைக்குள் நுழைவதற்குப் பக்தர்கள், போராட்டக்காரர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சபரிமலை போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் அமைப்புகளில் ஒன்றாக ஐயப்ப தர்ம சேனா செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் ஈஸ்வர் இருந்து வருகிறார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் பெண்கள் செல்ல முற்பட்டபோது மோதல் நடந்த நிலையில் அதுதொடர்பாக ராகுல் ஈஸ்வர் மீது கேரள போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர். சபரிமலையில் பெண் பத்திரிகையாளர்களை தாக்கியதாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பத்திம்திட்டா மாவட்டம் ரன்னியில் உள்ள கீழ் நீதிமன்றம் ராகுல் ஈஸ்வருக்கு ஜாமீன் வழங்கி இருந்தது.

ஆனால் ஜாமீன் பெற்ற ராகுல் ஈஸ்வர் தொடர்ந்து சபரிமலை போராட்டத்தை தூண்டிவிடுவதாக போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராகுல் ஈஸ்வருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது.

இந்தநிலையில் பாலக்காட்டில் ஐயப்ப சேவா சங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராகுல் ஈஸ்வர் வந்து இருந்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். அவரை பாலக்காடு காவல் நிலையம் அழைத்து சென்ற போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in