

பிஹாரில் தனது கட்சியில் வாய்ப்பளிக்க முடியாதவர்களை காங்கிரஸ் கட்சியில் இணையவைத்து, அக்கட்சியின் வேட்பாளர்களாக்கி விட்டார் லாலு என்ற பேச்சு நிலவுகிறது.
பிஹார் காவல் துறையின் தலைமை இயக்குநரான ஆஷிஷ் ரஞ்சன் சின்ஹா, ஓய்வு பெற்றவுடன் ராஷ்டிரிய ஜனதா தளத்தில் லாலுவுடன் இணைந்தார்.
இவரது சமூகமான குர்மிகள் வாக்கு அதிகம் கொண்ட நாளந்தா தொகுதியில் சின்ஹாவை போட்டியிட லாலு திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்தத் தொகுதி காங்கிரஸிடம் சென்று விட்டது.
இந்நிலையில் காரணம் எதுவு மின்றி திடீர் என காங்கிரஸில் இணைந்தார் சின்ஹா. அதே நாளில் அவர் நாளந்தாவின் காங்கிரஸ் வேட்பாளராக அறி விக்கப்பட்டுள்ளார். லாலு செய்த அதிரடி திட்டமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
அதேபோல், லாலுவின் நெருங்கிய சகாவாக இருந்தவர் பூர்ணமாசி ராம். இவர் ஐக்கிய ஜனதாவில் இணைந்து 2009 தேர்தலில் கோபால்கஞ்ச் எம்பி யானார். இந்நிலையில் பூர்ணமாசி ராமை காங்கிரஸில் சேரவைத்த லாலு, அவருக்கு வால்மீகி நகர் தொகுதியை பெற்றுத் தந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பிஹார் காங்கிரஸ் வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறுகையில், “பிஹாரில் வெறும் இரண்டு எம்.பி.க்களை மட்டும் வைத்திருக்கும் காங்கிரஸிடம் 12 தொகுதிகளில் நிறுத்த சரியான வேட்பாளர்கள் இல்லை. இதனால் வேறுவழியின்றி லாலு பிரசாத் யாதவ் சிபாரிசு செய்த 4 வேட்பாளர்களை நிறுத்தி யுள்ளோம்” என்றனர்.