

கர்நாடக மாநிலத்தில் கோயில் பிரசாதத்தைச் சாப்பிட்டதில் 12 பேர் பலியான விவகாரத்தில், கோயிலில் வழங்கப்பட்ட தக்காளி சாதத்தில் பூச்சிகொல்லி மருந்து கலந்திருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், சுலவாடி கிராமத்தில் கிச்சு மாரண்டா கோயில் உள்ளது. இந்த கோயில் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அப்போது, நேற்று கோயில் சார்பில் பக்தர்களுக்கு தக்காளி சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
அப்போது இந்த தக்காளி சாதத்தைப் சாப்பிட்ட சிறிது நேரத்தில் பலர் மயங்கி விழுந்தனர். சிலர் வாந்தி எடுத்து, தலைசுற்றலில் இருந்தனர். இதையடுத்து மயங்கி விழுந்தவர்களை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு சென்றதில் சிகிச்சை பலன்அளிக்காமல் 12 பேர் வரை உயிரிழந்தனர். 90-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், போலீஸாரின் முதல் கட்டவிசாரணையில் பக்தர்கள் சாப்பிட்ட கோயில் பிரசாத தக்காளி சாதத்தில் பூச்சி கொல்லி மருந்து கலக்கப்பட்டு இருப்பது அந்தச் சாதத்தை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது, மேலும், அந்தச் சாப்பாட்டை சாப்பிட்ட காகங்கள், பறவைகள் இறந்துகிடப்பதையும் போலீஸார் கண்டுபிடித்தனர்.
இந்த விவகாரத்தில் போலீஸார் இதுவரை 2 பேரைக் கைது செய்துள்ளனர், 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பக்தர்களைச் இன்று அறநிலையத்துறை அமைச்சர் புட்டரங்கா ஷெட்டி சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், “ கோயில் பிரசாதத்தில் சிலர் பூச்சிகொல்லி மருந்து கலந்துள்ளது தெரியவந்துள்ளது. தவறு செய்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே போலீஸார் இது தொடர்பாக இருவரைக் கைது செய்துள்ளனர். இரு தரப்புக்கும் இடையிலான பகையால், பக்தர்களை பலியாக்குவது முறையல்ல .
கோயில் பிரசாதத்தைச் சாப்பிட்ட பலர் இன்னும் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். சிலர் கடுமையாக பாதிக்கப்பட்டு செயற்சை சுவாச சிசிச்சையில் உள்ளனர். பெங்களூரில் உள்ள கேர் மருந்துவமனையில் 47 பேரும், மைசூருவில் உள்ள ஜே.எஸ்.எஸ். மருத்துவமனையில் 17 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 91 பக்தர்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் “ எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் எச்.டி.குமாரசாமி அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் இன்று மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சையில் பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.