புலந்த்ஷெஹர் கலவரத்தில் அரசியல் சதி: யோகி ஆதித்யநாத் திடீர் குற்றச்சாட்டு

புலந்த்ஷெஹர் கலவரத்தில் அரசியல் சதி: யோகி ஆதித்யநாத் திடீர் குற்றச்சாட்டு
Updated on
1 min read

புலந்த்ஷெஹர் கலவர சம்பவத்தில் அரசியல் சதி இருப்பதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார். அம்மாநில சட்டப்பேரவையில் பேசியபோது இதனை அவர் தெரிவித்தார்.

உ.பி.யின் புலந்த்ஷெஹரின் மஹாவ் கிராமத்தில் கடந்த 3-ம் தேதி பசுவதையின் பெயரில் கலவரம் நிகழ்ந்தது. இதில், புலந்ஷெஹரின் சாய்னா காவல் நிலைய ஆய்வாளர் சுபோத் குமார் சிங் மற்றும் மாணவர் சுபம் சிங் ஆகியோர் கொல்லப்பட்டனர். கலவரத்தை நடத்தியதாகவும், இருவரது கொலை வழக்கிலும் முக்கிய குற்றவாளிகளாக புலந்த் ஷெஹர் மாவட்ட பஜ்ரங்தளம் அமைப்பாளரான யோகேஷ் ராஜ், அவரது அமைப்பு சகாக்களான ஷிகார் அகர்வால் மற்றும் உபேந்திர ராகவ் ஆகியோர் மீது வழக்கு பதிவானது. மேலும், வழக்கில் குறிப்பிட்ட 76 பேரில் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் தலைமறைவாக உள்ளனர்.

இந்த விவகாரம் உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவையில் இன்று எதிரொலித்தது. சட்டப்பேரவை கூடிய முதல் நாளான இன்று மேலவை மற்றும் கீழவையில் இந்த புலந்த்ஷெஹர் கலவர பிரச்சினையை சமாஜ்வாதி உறுப்பினர்கள் எழுப்பினர். மாநில அரசை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

அப்போது உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில் ‘‘அரசியல் மூலம் வெற்றி பெற முடியாத சக்திகள் மாநிலத்தில் வன்முறை தூண்ட சதி செய்கின்றன. ஆனால் அவர்கள் சதி நிறைவேற வில்லை. உடனடியாக அமைதி நிலை நாட்டப்பட்டது. சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. இதுபோன்ற அரசியல் சதியை பாஜக அரசு வெற்றிகரமாக முறியடிக்கும். இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்’’ எனக் கூறினார்.

முன்னதாக இந்த சம்பவம் நடந்தபோது இது வெறும் விபத்து என அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in