Last Updated : 02 Dec, 2018 06:00 PM

 

Published : 02 Dec 2018 06:00 PM
Last Updated : 02 Dec 2018 06:00 PM

சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் வேலையில் காங்கிரஸ், டிஆர்எஸ் கட்சிகள் ‘பிஸி”: அமித் ஷா தாக்கு

தெலங்கானாவில் முஸ்லிம்களையும், கிறித்துவர்களையும் திருப்திப்படுத்தும் வேலையில் காங்கிரஸ் கட்சியும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியும் பரபரப்பாக இருக்கிறார்கள் என்று பாஜக தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டினார்.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கும் வரும் 7-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் தேர்தல் பிரச்சாரம் முடிய 3 நாட்களே இருக்கும் நிலையில், பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

மகபூப்நகர் நாராயணம்பேட்டை நகரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இடஒதிக்கீடு வழங்கப்படும் என்று தெலங்கானா முதல்வர் வாக்குறுதியளித்துள்ளார். ஆனால், அந்த நடவடிக்கையை ஒருபோதும் பாஜக அனுமதிக்காது. மதரீதியாக இட ஒதுக்கீடு வழங்குவது என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது, அவ்வாறு அரசமைப்புச்சட்டத்தில் இடமில்லை.

மறுபுறம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மசூதிகளுக்கும், தேவாலயங்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்கிறார். கோவில்களுக்கு கிடையாதா, ஏழை மக்களுக்கு கிடையாதா, அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்.

உருது மொழி தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அப்படியென்றால், தெலுங்கு மொழி தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லையா. சிறுபான்மையின குழந்தைகளை வெளிநாட்டில் சென்று படித்தால் ரூ.20 லட்சம் தருவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. அப்படியென்றால், ஏழைமக்களின் குழந்தைகளுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கும் அந்த உதவித்தொகை இல்லையா. சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவர்வதற்காக வாக்குறுதிகளைக் கொடுக்கிறார்கள்.

ஒருபுறம் தெலங்கானா மாநிலத்தை எம்ஐஎம் கட்சியின் தலைவர் ஓவைசி காலில் விழவைக்க சந்திரசேகர் ராவ் முயற்சிக்கிறார். மற்றொருபுறம் ராகுல் காந்தி பாகிஸ்தானுக்கு சித்துவை அனுப்பி, ராணுவ தலைவரை கட்டிப்பிடிக்க வைக்கிறார்.

தேர்தல் செலவுக்காக கோடிக்கணக்கான ரூபாய்களை சந்திரசேகர் ராவ் பதுக்கிவைத்துள்ளார். இந்த பணத்தை சட்டப்பேரவைத் தேர்தலுக்கும், மக்களவைத் தேர்தலுக்கும் பயன்படுத்துவார். மோடியின் பெருமையையும், புகழையும் நினைத்தும் சந்திரசேகர் ராவ் அச்சப்படுகிறார்.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x