

காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் மூன்று மாநிலங்களில் பதவி ஏற்கும் முதல் அமைச்சர்கள் பெயர் தெரியவந்துள்ளது. ராஜஸ்தானில் அசோக் கெல்லோட், மபியில் கமல்நாத் மற்றும் சத்தீஷ்கரில் பூபேஷ் பகேல் இடம் பெற்றுள்ளனர்.
நேற்று முடிவுகள் வெளியான முக்கிய மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனது முதல் அமைச்சர் வேட்பாளர்களை முன்னிறுத்தவில்லை. தனது கட்சியின் வழக்க்கம் எனும் பெயரில் ராஜஸ்தான், மபி மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸின் பல தலைவர்கள் போட்டியில் இருந்தனர்.
இவர்களில் ராஜஸ்தானின் முன்னள் முதல் அமைச்சரான அசோக் கெல்லோட் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரான சச்சின் பைலட் போட்டியில் இருந்தனர். இவர்களில் கெல்லோட்டிற்கு மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு கிடைக்க உள்ளது.
அசோக் கெல்லோட் ராஜஸ்தானின் முதல் அமைச்சராக மூன்றாவது முறையாகப் பதவி ஏற்கிறார். இவர் கடந்த 1998 முதல் 2003 வரையும், இரண்டாம் முறையாக 2008 முதல் 2013 வரையும் காங்கிரஸ் முதல்வராகப் பதவி வகித்தவர். இம்மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக நான்கு முறை பதவி வகித்தவர்.
தற்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரை முக்கியமான நேரங்களில் காங்கிரஸ் தலைமை பயன்படுத்தி வருகிறது.
மபியில் மக்களவையின் மூத்த காங்கிரஸ் தலைவரான கமல்நாத் முதல் அமைச்சராகப் பதவி ஏற்கிறார். முன்னாள் மத்திய அமைச்சருமான இவரை மபி தேர்தலை சந்திக்கும் பொருட்டு காங்கிரஸ் மபியின் கட்சி தலைவராக அமர்த்தி இருந்தது.
இவருக்கு உதவியாக இருந்த மற்றொரு முன்னாள் அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா இருந்தார். இவரது பெயரும் மபியின் காங்கிரஸ் முதல்வருக்கானப் போட்டியில் இருந்தது. இவர், மறைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் மாதவராவ் சிந்தியாவின் மகன் ஆவார்.
மற்ற அனைத்து மாநிலங்களை விட மபியில் காங்கிரஸ் தலைவர்கள் இடையே பல கோஷ்டிகள் உள்ளன. இதில், கமல்நாத் மற்றும் சிந்தியாவுடன் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங் மற்றும் மூத்த தலைவர் சுரேஷ் பச்சோரியும் இடம் பெற்றிருந்தனர்.
மபியில் சட்டப்பேரவை தேர்தல் துவங்கியதும் கமல்நாத்திற்கு காங்கிரஸ் அதிக முக்கியத்துவம் அளித்து வந்தது. வேட்பாளர்கள் தேர்விலும் கமல்நாத்தின் கையே ஓங்கி இருந்தது. கடுமையான போட்டியில் வெற்றி பெற்ற காங்கிரஸின் முதல்வராகும் வாய்ப்பு கமல்ல்நாத்திற்கே கிடைக்க உள்ளது.
இதில் இருந்து பிரிந்த மாநிலமான சத்தீஸ்கரில் காங்கிரஸ் முதல்வராக நான்கு பேர் போட்டியில் உள்ளனர். மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பகேல், எதிர்கட்சி தலைவராக இருந்த டி.எஸ்.சிங் தியோ, காங்கிரஸின் மக்களவை எம்பியான தம்ரத்வாஜ் சாஹு மற்றும் மபியின் முன்னாள் முதல்வரான சரண் தாஸ் மஹந்த் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இவர்களை பற்றி நேற்று ‘தமி இந்து திசை’ இணையதளத்தில் விரிவான செய்தி வெளியாகி இருந்தது. அதில் குறிப்பிட்டதை போல் பூபேஷ் பகேலுக்கு சத்தீஸ்கரின் முதல்வராகும் வாய்ப்பு கிடைக்க உள்ளது.