

ஹரியாணாவில் வரும் அக்டோபர் 15-ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக்தள் கட்சிக்கு (ஐ.என்.எல்.டி), ஐக்கிய ஜனதா தளம் ஆதரவளித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் உடனடியாக பிளவுபட்ட ஜனதா தள பரிவாரம் மீண்டும் ஒன்றுபட வேண்டிய தேவை எழுந்துள்ளது. மறைந்த முன்னாள் துணை பிரதமர் தேவி லால் காலத்திலிருந்து இரண்டு கட்சிக்கும் இடையில் நல்ல அரசியல் உறவு இருந்து வந்துள்ளதால் தற்போது மீண்டும் ஒன்றுபட்டு அரசியல் சவாலை சந்திக்க வேண்டும்.
ஆட்சிக்கு வந்தால் அரசில் ஐக்கிய ஜனதா தளமும் இடம் பெறும் என்று ஐ.என்.எல்.டி உறுதி அளித்துள்ளது. தலைநகர் டெல்லியின் அண்டை மாநிலமாக ஹரியாணா இருப்பதால் முந்தைய ஜனதா தள கட்சிகளை ஒன்றுபடுத்துவது பிரிவினை சக்திகளை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த உதவும். இந்த முயற்சிக்கு ஹரியாணா தேர்தலில் பலன் கிடைக்கும் என்று நிச்சயமாக நம்புகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.