Published : 05 Dec 2018 12:24 PM
Last Updated : 05 Dec 2018 12:24 PM

அந்தமான் பழங்குடியால் கொல்லப்பட்ட அமெரிக்கர் திட்டமிட்ட சாகசப் பயணத்தையே மேற்கொண்டார்: தேசிய பழங்குடியின ஆணையத் தலைவர் பேட்டி

அந்தமான் பழங்குடியால் அம்பெய்திக் கொல்லப்பட்ட அமெரிக்கர் திட்டமிட்ட சாகசப் பயணத்தையே மேற்கொண்டார் என்று தேசிய பழங்குடியின ஆணையத்தின் தலைவர் நந்த் குமார் சாய் தெரிவித்துள்ளார்.

அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து 35 மைல் தொலைவில் இருப்பதுதான் நார்த் சென்டினல் தீவு. இந்தத் தீவைச் சுற்றி 5 நாட்டிகல் மைல்வரை மனிதர்கள் செல்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தீவில் உள்ள பூர்வீகக் குடிகளான சென்டினல் பழங்குடி மக்கள் வேற்று மனிதர்களை விரும்பவதில்லை என்பதாலும், அவ்வாறு வரும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாலும் இங்கு செல்வது மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. அந்தமான் நிகோபார் தீவு பாதுகாப்புச் சட்டம் 1956-ன்கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். தடையை மீறிச் செல்வோருக்கு தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

இந்தக் கட்டுப்பாடுகளை மீறி கடந்த வாரம் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் சாவ் ( 27) மீனவர்கள் உதவியுடன் நார்த் சென்டினல் தீவுக்குச் சென்றார். முதலில் ஜான் ஆலனை ஏதும் செய்யாமல் இருந்த அந்தப் பழங்குடியினர், பின்னர் அம்பு எய்திக் கொலை செய்து, அங்கேயே புதைத்துவிட்டனர் என மீனவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போர்ட்பிளேரில் செய்தியாளர்களிடம் பேசிய நந்த் குமார் சாய், ''ஆரம்ப கட்ட விசாரணையில் அமெரிக்கர் ஜான் ஆலன் சாவ், திட்டமிட்ட சாகசப் பயணத்தையே மேற்கொண்டதாகத் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜான் சென் டினல் தீவுக்குள் செல்ல உதவியவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம். இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டவர்கள் இத்தகைய தீவுகளில் உள்ள பழமைவாய்ந்த ஆதிவாசிகளின் மீது எப்போதும் ஆர்வமாக இருக்கின்றனர். கடந்த காலங்களில் பழங்குடியினரைத் தொடர்பு கொள்ள பல்வேறு முறை முயன்றிருக்கின்றனர்.

ஆனால், பழங்குடியினரைக் காக்க வேண்டியது அவசியம். அவர்களின் வாழ்விடங்களில் வெளியாட்களை அனுமதிக்கக் கூடாது. ஜான் ஆலன் சாவ் கொல்லப்பட்டதற்கும் வரையறுக்கப்பட்ட எல்லைப் பகுதி திரும்பப் பெறப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

வரையறுக்கப்பட்ட எல்லைப் பகுதி திரும்பப் பெறப்பட்டாலும், சுற்றுலாப் பயணிகள் தீவுகளுக்குள் செல்ல வனத்துறையிடம் இருந்தும், அந்தமான் நிர்வாகத்திடம் இருந்தும் முன் அனுமதி பெறவேண்டும். சென்டினல் பழங்குடியினரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வோர் மீது பழங்குடியின ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.

அந்தமான், நிகோபார் தீவுகளில் உள்ள பழங்குடியின சமூகத்தின் வளர்ச்சி மற்றும் கல்விக்காக, ஒரு பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து, ஆணையம் பரிந்துரை செய்துள்ளது'' என்று நந்த் குமார் சாய் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x