Last Updated : 18 Dec, 2018 02:20 PM

 

Published : 18 Dec 2018 02:20 PM
Last Updated : 18 Dec 2018 02:20 PM

ராமர் கோயில் மீதான சட்டம் கொண்டுவர பாஜகவின் முக்கிய மூன்று கூட்டணிகள் எதிர்ப்பு

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான சட்டம் இயற்ற பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த எதிர்ப்புப் பட்டியலில் அகாலி தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜன சக்தி ஆகிய மூன்று முக்கியக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதன் மீதான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி முதல் அன்றாடம் விசாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டதால் இந்துத்துவா அமைப்புகள் அதிருப்திக்கு உள்ளாகின. இதன் மீது அவசரச் சட்டம் கொண்டுவரக் கூறி அவை தம் தோழமை அமைப்பான பாஜகவை வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், தன் தலைமையில் உள்ள மத்திய அரசு சார்பில் சட்டம் கொண்டு வர அதன் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்காக காத்திருப்பதே சரி எனவும் கருத்து கூறியுள்ளனர்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’இணையதளத்திடம் அகாலி தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளரான நரேஷ் குஜ்ரால் கூறும்போது,  ''சிறுபான்மையினர் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். மத்திய அரசின் சில கொள்கைகளால் அவர்கள் இடையே நாட்டில் பாதுகாப்பு உணர்வு குறைந்து வருகிறது. இதை ஏற்க முடியாது'' எனத் தெரிவித்தார்.

மேலும் நரேஷ் கூறுகையில்,  ''2014 தேர்தலில் பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்புகள், விவசாயிகளுக்கான வளர்ச்சி போன்றவைகளுக்காக பாஜகவுடன் கூட்டணி வைத்தோம். ஆனால், இந்தப் பிரச்சினைகள் இந்துத்துவாவினரால் கைப்பற்றப்பட்டு திசைதிருப்பி விடப்பட்டுள்ளது.  பெயர் மாற்றம், பசுவதை தடுப்புக் கொலைகள், ராமர் கோயில் என சிறுபான்மையினர் மீது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரை காத்திருப்பதை விடுத்து சட்டம் கொண்டுவருவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை'' எனத் தெரிவித்தார்.

இதே மனநிலையில் மற்றொரு கூட்டணியான பிஹாரின் லோக் ஜனசக்தி கட்சியும் கருதுகிறது. இதன் நிறுவனரும் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் ராமர் கோயில் விவகாரத்தில் கருத்து கூறியுள்ளார்.

இது குறித்து மக்களவை எம்.பி.யுமான சிராக் பாஸ்வான் கூறும்போது, ''நீதிமன்றத்தில் வழக்கு உள்ளபோது, ராமர் கோயில் போன்ற பிரச்சினைகளை எழுப்பி பொதுமக்களை குழப்பக் கூடாது. தேசிய ஜனநாயக முன்னணி அரசின் நோக்கம் தேசத்தின் வளர்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

பாஜக ஆதரவுடன் பிஹாரில் ஆளும் கட்சியும் அதன் முதல்வருமான நிதிஷ்குமாரும், ''ராமர் கோயிலுக்காக சட்டம் இயற்றுவது தம் கட்சிக்கு உடன்பாடில்லை. அதன் மீது நீதிமன்ற தீர்ப்பிற்காகக் காத்திருப்பதே நல்லது'' எனக் கூறி உள்ளார். ராமர் கோயிலுக்காக மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தால் அதற்கு தம் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவளிக்காது எனவும் நிதிஷ்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதனால், ராமர் கோயிலுக்கான சட்டம் இயற்றுவது சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x