

ரிசர்வ் வங்கியைக் காப்பாற்றுவதற்காகவே, உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவிப்பது பெருமையாக உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியாக டெல்லியில் 21 கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலை கூடி ஆலோசனை நடத்தினர். மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய குஷ்வாஹா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அதேசமயம் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பங்கேற்கவில்லை.
இதில் ராகுல் காந்தி, மன்மோகன் சிங், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, மு.க. ஸ்டாலின், சரத்பவார், தேவகவுடா, பரூக் அப்துல்லா, அரவிந்த் கேஜ்ரிவால், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறுகையில், ''ரிசர்வ் வங்கி, சிபிஐ உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் மீதான மத்திய அரசின் தாக்குதலை தடுக்க எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பாஜக அரசில் ரிசர்வ் வங்கி ஆளுநர் நீண்ட நாட்களுக்கு நீடிக்க மாட்டார் என ஏற்கெனவே கூறியிருந்தோம். உர்ஜித் படேல் தற்போது ராஜினாமா செய்துள்ளார். அவர் ரிசர்வ் வங்கியை காப்பாற்றுவதற்காகவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உர்ஜித் படேலுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவிப்பது பெருமையாக உள்ளது.
எதிர்க்கட்சிகளின் இலக்கு பாஜகவை வீழ்த்துவதும், நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அமைப்புகளை பாதுகாப்பதுதான்'' என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித் தலைவர்கள், நாளை (செவ்வாய்க்கிழமை) குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு எடுத்துள்ளதாகவும், அவரிடம் உர்ஜித் படேல் ராஜினாமா குறித்து முறையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.