Last Updated : 05 Dec, 2018 05:05 PM

 

Published : 05 Dec 2018 05:05 PM
Last Updated : 05 Dec 2018 05:05 PM

கேரள கடற்கரைக்கு விளையாடச் சென்ற குழுவில் திருச்சி வாலிபர் குத்திக்கொலை, 4 பேர் காயம்: தகராறில் கும்பல் வெறிச்செயல்

கேரளா குழுபிள்ளி கடற்கரையில் விளையாட்டு தகராறில் லோக்கல் ஆட்கள் கும்பலாக தாக்கியதில் திருச்சியைச் சேர்ந்த வாலிபர் கத்திக்குத்தில் பலியானார். 4 பேர் காயமடைந்தனர்.

கேரளாவில் உள்ள குழுப்பிள்ளி கடற்கரையில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கடும் சண்டையில் திருச்சியைச் சேர்ந்த கஜேந்திர குமார் என்பவர் கொல்லப்பட்டார். 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்சியைச் சேர்ந்த கஜேந்திர குமாருக்கு வயது 35. இவர் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டது, இதனையடுத்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சைப் பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

“இந்தக் கொலை தொடர்பாக 8 பேரை கைது செய்துள்ளோம். அவர்களை விசாரித்து வருகிறோம் அவர்கள் கைது செய்யப்பட்டது இன்னும் பதிவு செய்யப்படவில்லை. தடயவியல் நிபுணர்களும் மோப்ப நாய்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன” சப்-இன்ஸ்பெக்டர் டி.வி.ஷிபு தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் தெரிவித்தார்.

கொச்சி விமானநிலயத்துக்கு உணவுப்பொருட்களை வழங்கும் நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநர் உட்பட 11 பேர் கடற்கரைக்குச் சென்று உல்லாசமாக பொழுதைக் கழிக்கத் திட்டமிட்டு முதலில் சேரை கடற்கரைக்குச் சென்றனர். இந்தக் குழுவில் உள்ளவர்தான் கொல்லப்பட்ட கஜேந்திர குமார். இங்கு மாலை 5.30 மணி முதல் 8 மணி வரை வாலிபால் விளையாடி விட்டு, குழுப்பிள்ளி கடற்கரைக்குச் சென்றுள்ளனர்.  அங்கு அதி உயர விளக்கு வெளிச்சத்தில் கால்பந்து ஆடியுள்ளனர். ஆட்டம் இரவு அதிக நேரம் வரை நீடித்ததால் உள்ளூர்வாசிகள் என்ன ஆட்டத்தை முடிக்க மாட்டீர்களா என்று கேட்க சிறு தகராறு மூண்டது.

“சிறு கைகலப்புக்குப் பிறகு கடும் வார்த்தைச் சண்டையாக மாறியது.  கடற்கரையில் விளையாடிய நிறுவனத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் குடிபோதையில் இருந்தனர். இவர்கள் ஆட்கள் அதிகம் இருந்ததால் உள்ளூர்வாசிகள் முதலில் பின்வாங்கினர். ஆனால் அவர்கள் தங்கள் பகுதிக்குச் சென்று மேலும் சிலபல நபர்களை அழைத்து வந்தனர். வந்தவர்களும் உள்ளூர்வாசிகளும் சேர்ந்து பதிலடி கொடுக்கத் தொடங்கினர்” என்று சப் இன்ஸ்பெக்டர் ஷிபு கூறினார்.

இருதரப்பினருக்கும் இடையே கடும் சண்டை 10-15 நிமிடங்கள் நீடித்தது. இதில் கஜேந்திரகுமார் வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது. மற்ற 4 பேருக்கும் முதுகில் பலத்த காயம்.  கஜேந்திர குமார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இறந்தார், மற்றவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

“அதிகாலை 2.30 மணியிலிருந்து சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளோம்.  காலை 8 மணி வாக்கில் 8 பேர் எங்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர், அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x