Published : 06 Dec 2018 06:39 PM
Last Updated : 06 Dec 2018 06:39 PM

அலோக் வர்மாவை விடுப்பில் அனுப்பும் முடிவை இரவோடு இரவாக எடுக்க வேண்டிய அவசியம் என்ன? - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

சிபிஐ இயக்குநர்களுக்குள் ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் இயக்குநர் அலோக் வர்மா பணிவிடுப்பில் அனுப்பப்பட்ட முடிவை இரவோடு இரவாக எடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

 

இன்று நடைபெற்ற விசாரணையின் போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமனிடம்,  தேவைப்பட்டால் சிபிஐ இயக்குநரை உச்ச நீதிமன்றமே நியமனம் செய்ய வழிவகை உள்ளதா? என்று கேட்டனர்.

 

விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மாவுக்காக ஆஜரான ஃபாலி நாரிமன் இதற்குப் பதில் அளிக்கும் போது, அரசியல் சாசனத்தின் இறுதி விளக்கதாரராக உச்ச நீதிமன்றம் தனது ‘உள்ளார்ந்த அதிகாரங்களை’ செயல்படுத்துவதன் மூலம் செய்யலாம் என்று பதில் அளித்தார்.

 

பிறகு மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் வழக்கறிஞர் துஷார் மேத்தாவை நோக்கி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், அக்டோபர் 23ம் தேதி இரவோடு இரவாக அலோக்வர்மாவை பணிவிடுப்பில் அனுப்ப வேண்டிய அவசியம்தான் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

 

“மத்திய கண்காணிப்பு ஆணையத்தை இப்படி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தும் சூழல் இருந்திருக்கிறது என்றால் அது ஓர் இரவில் நடக்கக் கூடியதாக இருந்திருக்காது. நீங்கள் அலோக் வர்மாவை 2 மாதங்கள் பொறுத்துக் கொண்டீர்கள். இப்படியிருக்கையில் ஒர் இரவில் அவரை விடுப்பில் அனுப்பும் முடிவை எடுக்க வேண்டிய தேவை என்ன?” என்று கேள்வி எழுப்பினார் தலைமை நீதிபதி.

 

அதாவது சிபிஐ சிறப்பு இயக்குநர் ஆர்.கே.அஸ்தானா, அலோக் வர்மாவுடன் ஏற்பட்ட கசப்பான மோதலுக்குப் பிறகு கேபினட் செயல்ருக்கு முறைதவறிய நடத்தை பற்றிய புகாரை ஆகஸ்ட் 24ம் தேதி அனுப்புவதைத்தான் தலைமை நீதிபதி “2 மாத காலம் பொறுத்த நீங்கள் ஏன் ஓரிரவில் முடிவு எடுத்தீர்கள்” என்று சூசகமாகக் குத்தினார்.

 

இதற்குப் பதில் அளித்த சிவிசி வழக்கறிஞர் துஷார் மேத்தா, “சில அசாதாரணமான சூழ்நிலைகளுக்கு அசாதாரணமான மருத்துவமே தேவைப்படுகிறது.  சிபிஐயின் 2 மூத்த அதிகாரிகள் ஒருவருக்கு எதிராக ஒருவர் திரும்பிவிட்டனர். வழக்குகளை விசாரிப்பதற்கு பதிலாக இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார்களை அள்ளித் தெளித்து வந்தனர். ஒருவர் மீது ஒருவர் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யும் வரைக்கும் சென்றாகிவிட்டது. அவர்கள் சாட்சிகளை கலைக்கலாம். இது உண்மையில் ஒரு திடீர்ச் சூழல்தான்” என்றார்.

 

ஆனால் இந்தப் பதிலில் நீதிமன்றமும், தலைமை நீதிபதியும் திருப்தி அடையவில்லை, சிவிசி ஆகட்டும் அல்லது மத்திய அரசாகட்டும் இது தொடர்பாக பிரதமர் தலைமையிலான உயர் அதிகார குழுவிடம் ஏன் அனுமதி பெறவில்லை? என்று தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.  ஆனால் துஷார் மேத்தா இதற்கு ‘பிரதமர் தலைமை குழுவை ஆலோசிக்க வேண்டிய தேவையில்லை’ என்று பதில் அளித்தனர்.

 

“ஒரு நல்ல அரசின் சாராம்சம் என்னவெனில் ஏற்றுக் கொள்ளக் கூடியதைச் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் 2 தெரிவுகள் உங்கள் முன் உள்ளது, ஒன்று ஏற்றுக் கொள்ளக்கூடிய முடிவு, இன்னொன்று இன்னமும் கூடுதலாக ஏற்றுக் கொள்ளலாம் என்ற முடிவு, இந்த இரண்டில்  கூடுதலாக ஏற்றுக் கொள்ளக்கூடிய தெரிவை தேர்ந்தெடுக்காமல் இருக்க உங்களை எது தடுத்தது?” என்று மத்திய அரசை நோக்கியும் சிவிசி நோக்கியும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கூர்மையான கேள்வியை எழுப்பினார். மேலும் அரசோ, சிவிசியோ இன்னும் கூட பிரதமர் தலைமையிலான குழுவை ஏன் ஆலோசிக்கவில்லை என்பதற்கு காரணம் கூறவில்லை என்பதை கோர்ட் அறிவுறுத்தியது.

 

அலோக் வர்மாவுக்கு 2 ஆண்டுகால பதவிக்காலம் உள்ளது, அதற்கு முன்னரே அவரை அனுப்ப வேண்டும் என்றால் நீங்கள் ஏன் கமிட்டியை ஆலோசிக்கவில்லை? என்றார் தலைமை நீதிபதி.

 

இதற்குப் பதில் அளித்த சிவிசி வழக்கறிஞர் துஷார் மேத்தா,  சிபிஐ மூத்த இயக்குநர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. எனவே இதில் தலையிட்டு சில முடிவுகளை எடுக்கவில்லை எனில் சிவிசி மீதுதான் ‘கடமை தவறியக் குற்றச்சாட்டு’ எழும் என்றார்.

 

மேலும், நாங்கள் ஏதோ நடவடிக்கை எடுத்து விட்டு இங்கு வந்து நியாயப்படுத்துகிறோம் என்று அர்த்தமல்ல என்றும் கூறினார் துஷார் மேத்தா.

 

அலோக் வர்மா, மற்றும் காமன்காஸ் என்ற என்.ஜி.ஓ. செய்த இரு தனித்தனி மனுக்கள் மீதான இன்றைய நாள் முழுதுமான விசாரணைக்குப் பிறகு கோர்ட் விசாரணையை ஒத்தி வைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x