Published : 11 Dec 2018 11:02 AM
Last Updated : 11 Dec 2018 11:02 AM

பாஜக ஆளும் 3 மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை; தெலங்கானாவில் டிஆர்எஸ் ‘வலு’

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பாஜக ஆளும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வருகிறது. அதேசமயம், தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தனிப்பெரும்பான்மையுடன் முன்னிலை வகிக்கிறது.

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் பல்வேறு கட்டங்களாக கடந்த 7-ம் தேதி முடிந்தது. 2019-ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுவதால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த 5 மாநிலங்களில் குறிப்பாக சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை 5 மாநிலங்களில் நடந்து வருகிறது.

இதில் தெலங்கானா மாநிலத்தில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி 82 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில் ஆட்சி அமைக்க 60 இடங்கள் பெற்று இருந்தாலே போதுமானது, ஆனால், டிஆர்எஸ் கட்சி தற்போது தனிப்பெரும்பான்மை பலத்துடன் முன்னிலையில் உள்ளது. அந்தக் கட்சியின் தலைவரும் முதல்வருமான சந்திரசேகர் ராவ் முன்னிலை வகித்துள்ளார். இதனால், 2-வது முறையாக தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின், காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 199 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 101 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் பாஜக 80 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஏறக்குறைய பாஜக 50 தொகுதிகளில் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தால் ஆளும் கட்சியில் அமைச்சர்களாக இருக்கும் 12 பேர் கடும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

முதல்வர் வசுந்தரா ராஜே ஜல்பிரதான் தொகுதியில் 4 ஆயிரம் வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திர சிங் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

டாங்க் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சச்சின் பைலட் 2 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார். முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியில் 5,112 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

இதேபோல சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆண்டு வரும் நிலையில், அங்கு தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ளது. 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி 53 இடங்களில் முன்னிலையும், பாஜக 26 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது. ஏறக்குறைய பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக பின்னடைந்துள்ளது.

மத்தியப் பிரேதச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் தலைமையிலான பாஜக அரசு பின்னடைவைச் சந்தித்துள்ளது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளும் கடும் போட்டியோடு சென்றன. ஆனால், நேரம் செல்ல செல்ல, காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இங்குள்ள 230 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 115 உறுப்பினர்கள் தேவை. காங்கிரஸ் கட்சி தற்போது 114 இடங்களிலும், பாஜக 94 இடங்களிலும் முன்னிலையுடன் இருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x