2-வது இன்னிங்ஸை தொடங்கினார்: தெலங்கானா முதல்வராக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

2-வது இன்னிங்ஸை தொடங்கினார்: தெலங்கானா
முதல்வராக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்
Updated on
1 min read

தெலங்கானா மாநில முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் இன்று பதவி ஏற்றார்.

ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான நிழச்சியில் ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் சந்திரசேகர் ராவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தெலங்கானாவில் உள்ள 199 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த 7-ம் தேதி தேர்தல் நடந்து, கடந்த 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி 88 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றது. காங்கிரஸ், தெலங்குதேசம் கூட்டணி 19 இடங்களையும், பாஜக ஒரு இடத்திலும் பெற்றது.

இதையடுத்து தனிப்பெரும்பான்மை பலத்துடன் 2-வது முறையாக ஆட்சியைப்பிடித்த கே.சந்திரசேகர் ராவ் இன்று முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.

ஆளுநர் மாளிகையில் இன்று நண்பகலில் நடந்த எளிமையான நிகழ்ச்சியில் பிற்பகல் 1.25 மணிக்கு கே.சந்திசேகர் ராவுக்கு முதல்வராக ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

முதல்வர் சந்திரசேகர் ராவுடன், முகமது மெகமூத் அலியும் பதவி ஏற்றுக்கொண்டார். அமைச்சரவையை விரிவுபடுத்துவது குறித்து அடுத்த கட்டமாக முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பார்.

இந்த தேர்தலில் கஜேவால் தொகுதியில் போட்டியிட்ட சந்திரசேகர் ராவ் 50 ஆயிரத்துக்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த 1985-ம் ஆண்டில் இருந்து தேர்தலில் போட்டியிட்டுவரும் சந்திரசேகர் ராவ் இதுவரை ஒருமுறை கூட தோல்வி அடைந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானா மாநிலம் தனியாக உதயமான பின் 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி 63 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை 88 இடங்களில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in