

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விஷயத்தில் பாஜக தங்களின் நிலைப்பாட்டை உறுதியாகத் தெரிவிக்க வேண்டும். ராமர் விஷயத்தில் ஆசைவார்த்தை பேசாதீர்கள், மன்னிக்கமாட்டோம் என்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பாஜகவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.
மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூர் மாவட்டம், பந்தர்பூரில் சிவசேனா கட்சி சார்பில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பங்கேற்றார் அப்போது அவர் பேசியதாவது:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விஷயத்தில் பாஜகவினர் தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகவும், உறுதியாகவும் வெளிப்படுத்த வேண்டும். ராமர் கோயில் விவகாரத்தை நாடாளுமன்றக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச வேண்டும்.
நான் பாஜகவுக்கு ஒன்றைத் தெளிவாக கூற விரும்புகிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நல்லகாலம் வந்துவிடும் என்று வெற்றுவார்த்தை பேசினீர்கள் பொறுத்துக்கொண்டோம், ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்று உறுதியளித்தீர்கள் அதையும் பொறுத்துக்கொண்டோம்.
ஆனால் கடவுள் நம்பிக்கையில், கடவுள் ராமர் விவகாரத்தில் பொய்யான வாக்குறுதியையும், ஆசை வார்த்தையையும் கூறினால் பாஜகவை நாங்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டோம். ராமர்கோயில் விவகாரத்தில் கும்பகர்ணன் போல் தூங்கிக்கொண்டிருக்கும் பாஜகவை எழுப்பவே நான் அயோத்திக்கு சென்றேன். ஆனாலும் இன்னும் தெளிவான பதில் இல்லை.
கடவுள் ராமர் பெயரை வைத்து மட்டுமல்ல எந்தக் கடவுள் பெயரைப் பயன்படுத்தியும் ஆசை வார்த்தை கூறினால், பாஜகவை மன்னிக்கமாட்டோம். மகாராஷ்டிராவில் பாஜகவின் வெற்று வார்த்தைகள் அனைத்தையும் சிவேசேனா வெளிப்படுத்தும்.
நாடாளுமன்றத்தில் ராமர் கோயில் விவகாரத்தைப் பிரதமர் மோடி எழுப்பிப் பேசினால்தான், தேசிய ஜனநாயகக்கூட்டணியில் உள்ள கட்சிகளின் நிலைப்பாடு என்ன, எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பதை அறிய முடியும்.
பிஹார் மாநிலத்தில் 2019-ம் ஆண்டு தேர்தலுக்கான இடங்கள் பகிர்வு முடிந்துவிட்டதாக அறிந்தேன். பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். நிதிஷ்குமாருடன் இணைந்துள்ளதற்கு பாஜகவுக்கு வாழ்த்துக்கள். ஆர்எஸ்எஸ் இல்லாத தேசியம் உருவாக வேண்டும் என்று குரல்கொடுத்துவரும் நிதிஷுடன் பாஜக இணைந்துள்ளது.
ராமர்கோயில் விவகாரம், இந்துத்துவா விஷயத்தில் சிவசேனா தீவிர ஆதரவளிக்கும், அதேபோல், நிதஷ்குமாரும், ராம்விலாஸ் பஸ்வானும் ஆதரவு அளிக்க வேண்டும். தேர்தலுக்கு சில மாதங்களுக்குமுன்புதான் இந்த விஷயத்தை நான் கையில் எடுத்திருக்கிறேன். வரும் விளைவுகளை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.
குஜராத்தில் நடந்த சொராபுதீன் சேக் போலி என்கவுன்ட்டர் வழக்கில்கூட தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், அயோத்தி வழக்கு இன்னும் நடக்கிறது. உங்களின் தேவைக்கு ஏற்றார்போல் வழக்குகளில் தீர்ப்பை பெற்றுக் கொள்கிறீர்கள், மற்றவை அந்தரத்தில் நிற்கிறது.
நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்க மத்திய அரசு 10 முகமைகளுக்கு அதிகாரம் அளித்துள்ளது. இதேபோல் காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததால் செய்தோம் என்று பாஜகவினர் கூறுகிறார்கள். அப்படியென்றால், ஏன் அனைவரையும் அழைத்து ஆலோசிக்கவில்லை. காங்கிரஸ் இதுபோல் செய்துதான் ஆட்சியை இழந்தார்கள், நீங்களும் அதுபோல் செய்து அவசரநிலையை அமல்படுத்த முனைகிறீர்கள்.
விவசாயிகள் கோபப்பட்டால், நான் பாஜகவுடன் தொகுதிகள் குறித்துப் பேசி நேரத்தை வீணடிக்க மாட்டேன். விவசாயிகள் கடன் இல்லாமல் இருக்க வேண்டும். எனக்கு ராமர் கோயில் கட்ட வேண்டும், பயிர்காப்பீடு பெற்றவர்கள் அதன் பலனைப் பெற வேண்டும்.
ரபேஃபேல் விமானக் கொள்முதலில் நடந்த ஊழல்போன்றுதான், பயிர்க்காப்பீட்டிலும் நடந்துள்ளது.
இவ்வாறு உத்தவ் தாக்கரேபேசினார்.