

எதிர்க்கட்சிகள் தங்கள் சுயநலத்துக்காகவே மெகா கூட்டணி என பேசி வருகின்றன, இதில் மக்கள் நலம் துளியும் இல்லை என பிரதமர் மோடி பேசினார். தமிழக பாஜக நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடிய போது அவர் இதனை தெரிவித்தார்.
பிரதமர் மோடி நாடு முழுவதும் மாவட்ட வாரியாகவும் தொகுதி வாரியாகவும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதி வாரியாக மாநில, மாவட்ட மண்டல நிர்வாகிகள் மற்றும் பூத் பொறுப்பாளர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். நிர்வாகிகள் மற்றும் பூத் பொறுப்பாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார். மேலும், கட்சி பணிகள், தொகுதியைப் பற்றிய தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களையும் பிரதமர் மோடி அறிந்து கொள்கிறார்.
இந்நிலையில், 3-வது கட்டமாக நடைபெறும் கலந்துரையாடலில் தமிழகத்தில் மத்திய சென்னை, வடசென்னை, திருச்சி, மதுரை, திருவள்ளூர் ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்த மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள், பூத் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்காக 5 தொகுதிகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஒவ்வொரு இடங்களிலும் 600 முதல் 1000 பேர் வரையில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:
‘‘நகரமயமாக்கலை சவாலாக கருதாமல், வாய்ப்பாக கருத வேண்டும். அடுத்த 20 ஆண்டுகளில் வேகமாக வளரும் நகரங்களின் டாப் 10 பட்டியலில் இந்தியாவில் உள்ள நகரங்கள் இடம்பெறும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில், தமிழகத்தில் உள்ள 3 நகரங்களுக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீனாட்சி அம்மன் கோயிலால் புகழ்பெற்ற மதுரை இனிமேல் எய்ம்ஸ் மருத்துவமனையாலும் புகழ்பெறும். தொண்டர்கள் அனைவரும் மத்திய அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்து விளக்க வேண்டும். பல தலைவர்கள் மெகா கூட்டணி பற்றி பேசி வருகின்றனர். இந்த கூட்டணி கொள்கை ரீதியாக அமையவில்லை. தங்களை காத்துக்கொள்ளவும், அதிகாரத்திற்காகவுமே அமைகிறது’’ என பேசினார்.