

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பிரதமர் மோடி தலைமையிலான அரசு உருவாக்கிக் கொடுத்திருந்தால், ஆல்வார் நகரில் ஏன் 4 இளைஞர்கள் தற்கொலை செய்யப்போகிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் கடந்த மாதம் 4 இளைஞர்கள் வேலை கிடைக்காத விரக்தியில், ஓடும் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
விசாரணையில் அவர்கள் 4 பேரும் வேலை கிடைக்காத விரக்தியில் இந்த முடிவை எடுத்ததாக போலீஸார் தெரிவித்தனர். இந்த விஷயத்தைக் குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 7-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆல்வார் நகரில் இன்று காங்கிரஸ் சார்பில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, மோடி ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று இளைஞர்களுக்கு வாக்குறுதி அளித்தார்.
நான் கேட்கிறேன், நீங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருந்தால், ஆல்வாரில் கடந்த மாதம் 4 இளைஞர்கள் மனவிரக்தியில் ஏன் தற்கொலை செய்திருப்பார்களா?
ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் பாரத் மாதா கிஜே என்று பிரதமர் மோடி முழுக்கமிட்டுவிட்டு அனில் அம்பானி நலத்துக்காக உழைக்கிறார். பாரத் மாதா கி ஜே என்று மோடி முழங்குவதற்குப் பதிலாக இனிமேல், அனில் அம்பானி கி ஜே, மெகுல் சோக்சி கி ஜே, நிரவ் மோடி கி ஜே, லலித் மோடி கி ஜே என்று கோஷமிடலாம்.
பாரத் மாதா என்பவர் ஒட்டுமொத்த நாட்டின் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைவருக்கும் பொதுவானவர். பாரத மாதா குறித்துப் பேசினால்,எப்படி உங்களால் விவசாயிகளை மறக்க முடியும். குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கு ரூ.3.5 லட்சம் கோடியை தள்ளுபடி செய்த மோடி, விவசாயிகளின் பயிர்க்கடனில் ஒரு ரூபாயைக் கூட தள்ளுபடி செய்யவில்லை.
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெல்லும் என நம்புகிறேன். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும். 18 மணிநேரத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் குறித்து இதுவரை பிரதமர் மோடி பேசவில்லை. அவர் பேசினால், கூட்டத்தில் உள்ள மக்கள் யாரோ, காவல்காரர் திருடர் என்று சொல்லிவிடுவார்கள்''.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.