

ம.பி.யில் பாஜகவின் சிவராஜ்சிங் சவுகான் தனது முதல்வர் குடியிருப்பை காலி செய்வதாகப் புரளி கிளம்பியுள்ளது. இதற்காகச் செலவாகும் தொகையை அவர் தனியார் போக்குரத்து நிறுவனத்திடம் கேட்டுப் பெற்றதாக போலி ரசீது வைரலாகி வருகிறது.
பாஜக ஆளும் ம.பி.யில் தொடர்ந்து மூன்றாம் முறை முதல்வராக சிவராஜ்சிங் சவுகான் உள்ளார். இவர் நான்காம் முறையாகத் தொடருவாரா என்பது டிசம்பர் 11-ல் வெளியாகும் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.
ஆனால், அதற்கு முன்பாகவே அவர் 'அகர்வால் பேக்கர்ஸ்&மூவர்ஸ்' எனும் தனியார் நிறுவனத்திடம் செலவுத்தொகையைப் பேசியதாக, அதன் போலி ரசீது சில விஷமிகளால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் செலவுத்தொகை என பதினைந்து லட்சம் ரூபாய் இடம் பெற்றுள்ளது.
இந்த ரசீதில் குறிப்பிட்டுள்ளதன்படி, சிவராஜ்சிங் போபாலில் இருந்து மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பைக்கு மாறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக இணையதளங்களில் வைரலாகி வரும் ரசீதின் மீது அந்த தனியார் நிறுவனத்தின் நிர்வாகி அகர்வால், சைபர் கிரைம் செல் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து தனது புகாரில் அகர்வால் கூறும்போது, ''எங்கள் நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் கற்பிக்க வேண்டி சில போட்டி நிறுவனங்கள் இதைச் செய்துள்ளனர். இதன் மீது நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 28-ல் ம.பி. மாநில சட்டப்பேரவையின் 230 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு இடையிலான இருமுனை நேரடிப்போட்டி அதில் கடுமையாக நிலவியது.