

இ-வர்த்தக நிறுவனங்களான ஸ்விக்கி, ஸொமாட்டோ உட்பட பிற நிறுவனங்கள் தங்கள் பட்டியலிலிருந்து சுமார் 10,500 உணவு விடுதிகளை நீக்கியுள்ளது. இந்த உணவு விடுதிகளுக்கு முறையான உரிமம் இல்லை என்பதால் நீக்கப்பட்டதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார இணையமைச்சர் அஷ்வினி குமார் சவ்பே 2006-ம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டங்களின் படி முறையான பதிவு பெறாமல் உரிமம் பெறாமல் செயல்படும் உணவகங்களை சேவைப் பட்டியலிலிருந்து நீக்குமாறு உணவுப்பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் கடந்த ஜூலையில் அறிவுறுத்தியதையடுத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
“ஸொமாட்டோ 2500 உணவகங்களையும் ஸ்விக்கி 4000 உணவகங்களையும் ஃபுட் பாண்டா 1800 உணவகங்களையும் ஊபர் ஈட்ஸ் 2000 உணவகங்களையும், ஃபுட் கிளவுட் சுமார் 200 உணவகங்களையும் தங்கள் சேவைப்பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.
மேலும் அனைத்து மாநில உணவுப்பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையர்கள் இந்த உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிமம் பெறாமல் எந்த உணவகமும் உணவுகளை விற்க முடியாது.
மேலும் அவ்வப்போது உணவகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்றும் உணவு மாதிரிகள் தர நிர்ணய விதிமுறைகளில் உள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும், இல்லையெனில் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் அவசியம் என்று மத்திய அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.