

ரஃபேல் போர் ஒப்பந்தத்தை ஆராய நீதிமன்றம் தனக்கு இருக்கும் எல்லைகளைக் கூறினாலும், நாம் அந்த ஒப்பந்தத்தை ஆய்வு செய்யாமல் இருக்கக்கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் 36 ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இதுதொடர்பாக நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணை செய்தது.
அதில், ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு செய்துள்ள ஒப்பந்தத்தில் எந்தவிதமான முறைகேடுகளும் நடந்ததற்கான முகாந்திரம் இல்லை என்று தெரிவித்து அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் ரஃபேல் ஒப்பந்தத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும், ரஃபேல் ஒப்பந்தத்தை ஆய்வு செய்யாமல் விடக்கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். பெங்களூரில் நிருபர்களுக்கு ப.சிதம்பரம் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மத்திய அரசு வேண்டுமென்றே நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்திவிட்டது. அதன்பின் நீதிமன்றம் தங்களின் அறிக்கையைத் தவறாக வாசித்துவிட்டதாகக் குற்றம்சாட்டியது. நீதிமன்றத்துக்கு ஆங்கில இலக்கணத்தையும் கற்றுக்கொடுக்க மத்தியஅரசு முயல்கிறது.
ரூ.60 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தில் 36 விமானங்கள் மட்டுமே வாங்கப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 126 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டன. ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் அதிகமாகத் தலையிட முடியாது எனக் கூறி தனக்கு இருக்கும் வரையறையை நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. அதற்காக அப்படியே விட்டுவிடமுடியாது, ரஃபேல் ஒப்பந்தம் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
மக்களிடம் இந்த ஒப்பந்தத்தை எடுத்துச் சென்று, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும். காங்கிரஸ் அரசு செய்த ஒப்பந்தத்தில் 126 விமானங்கள் வாங்குவதாக இருந்தது. ஒவ்வொரு விமானத்தின் மதிப்பும் ரூ.526 கோடியாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. 18 விமானங்கள் பறக்கும் நிலையில் சப்ளை செய்யப்பட இருந்தது. 108 விமானங்கள் இந்தியாவில் எச்ஏஎல் நிறுவன உதவியுடன் தயாரிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை பிரதமர்மோடி கடந்த 2015-ம் ஆண்டு ரத்து செய்துவிட்டு, 36 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார். புதிய ஒப்பந்தத்தின் படி ஒரு விமானத்தின் விலை ரூ.1,670 கோடியாகும். அப்படியென்றால், ரஃபேல் விமானத்தின் விலை மூன்றுமடங்கு அதிகரித்துவிட்டது உண்மையா.
புதிய ஒப்பந்தத்தின்படி 9 சதவீதம் விலை குறைவு என்று மத்திய அரசு கூறிவருகிறது. அப்படியென்றால், ஏன் 36 விமானங்கள் வாங்க வேண்டும், 126 விமானங்கள் வாங்கலாமே. மேலும்,புதிய ஒப்பந்தத்தில் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து எச்ஏஎல் நிறுவனத்துக்கு எந்தவிதமான தொழில்நுட்ப பரிமாற்றங்கள் குறித்த தகவலும் இல்லை. ஆனால், ஒப்பந்தத்தை ஒரு தனியார் நிறுவனத்துக்கு வழங்கக் கோரி மத்திய அரசு பரிந்துரை செய்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.