Published : 21 Dec 2018 09:19 AM
Last Updated : 21 Dec 2018 09:19 AM

நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்க 10 அமைப்புகளுக்கு அதிகாரம்; ஒத்துழைக்க மறுத்தால் 7 ஆண்டு சிறை: மத்திய அரசு

நாட்டில் உள்ள அனைத்து கணினிகளும் மத்திய அரசு தனது கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது. அரசின் 10 விசாரணை அமைப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பவர்களுக்கு 7 ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.

நாட்டில் உள்ள அனைத்து கணினிகளில் பாதுகாத்து வைத்திருக்கும் தகவல்கள், பரிமாறப்படும் தகவல்களைக் கண்காணிப்பது, அனுப்பும் தகவல்களைக் கண்காணிப்பது, அந்தத் தகவல்களை இடைமறித்து ஆய்வு செய்வது, தடைசெய்வது, தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்வது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் செய்ய மத்திய அரசின் 10 விசாரணை முகமைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரம் அளித்துள்ளது.

அதன்படி, உளவுத்துறை (ஐபி), போதை மருந்து கடத்தல் தடுப்புப் பிரிவு (என்சிபி), அமலாக்கப்பிரிவு (ஈ.டி.), மத்திய நேரடிவரிகள் வாரியம் (சிபிடிடி), வருவாய் புலனாய்வு (டிஆர்ஐ), சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, டெல்லி போலீஸ் ஆணையர் அலுவலகம் (என்ஐஏ) ஆகியவற்றுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “ மத்திய அரசின் உளவுத்துறை (ஐபி), போதை மருந்து கடத்தல் தடுப்புப் பிரிவு (என்சிபி), அமலாக்கப் பிரிவு (ஈ.டி.), மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி), வருவாய் புலனாய்வு (டிஆர்ஐ), சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, டெல்லி போலீஸ் ஆணையர் அலுவலகம் (என்ஐஏ) ஆகிய 10 விசாரணை முகமைக்குத் தேவை ஏற்படும் நேரத்தில் எந்தத் தகவல் தொடர்புசேவை வழங்குவோர், அல்லது பயன்பாட்டாளர் அல்லது கணினி மையத்தின் பொறுப்பாளர் உதவ வேண்டும். அனைத்து விதமான தகவல் தொடர்பான வசதிகளையும் அளிக்க வேண்டும். அவ்வாறு ஒத்துழைக்கத் தவறினால், அவர்களுக்கு 7 ஆண்டுவரை கடுங்காவல் சிறையும், அபராதமும் விதிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69(1) ன்படி, இந்த அதிகாரத்தை 10 விசாரணை முகமைகளுக்கு வழங்கியுள்ளது. நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்தல், பாதுகாப்புத் துறை ரகசியத்தைப் பாதுகாத்தல், மாநிலத்தின் பாதுகாப்பு, வெளிநாடுகளுடன் நட்புறவு உள்ளிட்டவற்றைப் பேணுவதற்காக இந்த 10 முகமைகளுக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x