

புலந்த்ஷெஹர் கலவரத்தின் முக்கியக் குற்றவாளியான யோகேஷ் ராஜ் (24) தேடப்பட்டு வருகிறார். ‘அகண்ட பாரதம்’அமைக்க விரும்பும் இவர், தனது கிராமத்தின் இந்து பாதுகாவலராகக் கருதப்படுகிறார்.
நேற்று முன்தினம் புலந்த்ஷெஹரின் சயானா கிராமத்தில் பசுவதையைக் கண்டித்து நடைபெற்ற கலவரத்தில் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டனர். இதன் மீதான வழக்குகள் 70 பேர் மீது பதிவாகி உள்ளன. இதில், தேவேந்திரா, சமன் சிங், ஆஷிஷ் சவுகான் மற்றும் சதீஷ் என நால்வர் கைதாகி உள்ளனர். சயான்ஸ் கிராமத்தில் பசுவதை செய்ததாக யோகேஷ் அளித்த புகாரின் பேரில் தனது நயாபன்ஸ் கிராமத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட ஏழு முஸ்லிம்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் முதல் தலைமறைவாகி விட்ட யோகேஷ் குறித்து பல முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவருடங்களுக்கு முன் சாதாரண உறுப்பினராக பஜ்ரங் தளத்தில் இணைந்தவர், சில மாதங்களுக்கு முன் மாவட்ட அமைப்பாளராக உயர்த்தப்பட்டிருக்கிறார். புலந்த்ஷெஹரின் நயா பன்ஸ் கிராமத்தைச் சேர்ந்த யோகேஷுக்கு, இந்தியாவை ‘அகண்ட பாரதம்’ எனக் காணும் விருப்பம் இருந்துள்ளது. இதை வெளிப்படுத்தும் வகையில் அதன் பெரிய அளவு வரைபடத்தை தனது வீட்டின் முன் யோகேஷ் ஒட்டி வைத்துள்ளார்.
இந்த வரைபடத்தில் பாகிஸ்தான், பாகிஸ்தானில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளும் உள்ளடங்கி உள்ளன. இது குறித்து புலந்த்ஷெஹரின் இளைஞர்கள் இடையே யோகேஷ் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்துள்ளார்.
இந்தப் பிரச்சாரம் மூலம் இளைஞர்களுக்கு தேசபக்தியை ஊட்டுவதுடன், இந்தியா மேலும் பிளவுபடாமல் இருக்கும் என்பது யோகேஷின் கருத்தாக உள்ளது. இதற்காக, யோகேஷுக்கு புலந்த்ஷெஹர் விஷ்வ இந்து பரிஷத்தினரும் உதவி வந்துள்ளனர். அகண்ட பாரதம் என்பதை தனது செயல்பாடுகளில் ஒன்றாக பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) கொண்டிருந்தது. ஆனால், அதை தற்போது ஆர்எஸ்எஸ் வலியுறுத்துவதில்லை.
தனது கிராமத்தின் இந்து பாதுகாவலராக யோகேஷ் கருதப்படுகிறார். இங்குள்ள பொதுமக்களின் பிரச்சினைகளை போலீஸார் வருவதற்கு முன்பாக யோகேஷ் தலையிட்டு தீர்த்து வைப்பதாக கிராமவாசிகள் கருதுகின்றனர்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திடம் நயா பன்ஸ் கிராமவாசியும் யோகேஷின் வகுப்பு தோழியுமான அஞ்சு சிங் கூறும்போது, ''யோகேஷ் பய்யா மற்றும் பஜ்ரங் தளத்தினரால் இங்கு பசுவதை இல்லாமல் உள்ளது. இளம்பெண்களையும் கேலி செய்து வந்த முஸ்லிம்கள் அவர்களுக்கு பயந்து அடங்கி உள்ளனர்'' எனத் தெரிவித்தார்.
தனது பொதுப்பணிக்காக யோகேஷ் புலந்த்ஷெஹரின் தனியார் நிறுவன வேலையை ராஜினாமா செய்து விட்டார். தற்போது அருகிலுள்ள கல்லூரியில் யோகேஷ் சட்டக்கல்வி பயில்கிறார்.
யோகேஷ் மீது பதிவான வழக்கில், கொல்லப்பட்ட ஆய்வாளர் சுபோத் தொடர்ந்து கோரியும் அவர் போலீஸாருக்கு எதிராக கும்பலை வன்முறைக்குத் தூண்டி விட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.