Published : 05 Dec 2018 09:11 AM
Last Updated : 05 Dec 2018 09:11 AM

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தில் இந்து அமைப்புகள் யாகம்: அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது.அதன் 26-வது ஆண்டு தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனிடையே அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், 6-ம் தேதியை, வெற்றி தினமாகவும் டிசம்பர் 18-ம் தேதி ‘கீதா ஜெயந்தி’ (பகவத் கீதை) கொண்டாடவும் பல்வேறு இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக யாகங்கள், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளன. சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். ராமர் கோயில் கட்ட எந்தத் தடைகள் வந்தாலும் அவற்றை நீக்கி மக்களுக்கு சரஸ்வதி தேவி உதவி செய்வார் என்று அயோத்தியில் உள்ள விஎச்பி செய்தித் தொடர்பாளர் சரத் சர்மா நேற்று முன்தினம் கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘ராமர் கோயில் கட்டுவதற்குள்ள எல்லா தடைகளும் நீங்க சர்வ பாத முக்தி யாகங்கள் நடைபெறும். அதேநேரத்தில் துப்பாக்கி குண்டுகளால் இறந்த கரசேவகர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்படும்.’’

ராமர் கோயில் கட்ட வேண்டும், பசுக்களைப் பாதுகாக்க வேண்டும், கங்கை நதியை போற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஜனவரி 31-ம் தேதி மற்றும் பிப்ரவரி 1-ம் தேதி பிரயாக்ராஜ் (அலகாபாத்) பகுதியில் தர்ம சன்சாத் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் நாடு முழுவதிலும் இருந்து 5,000 மடாதிபதிகள் பங்கேற்க உள்ளனர்.

‘‘டிசம்பர் 6-ம் தேதி 500-க்கும் மேற்பட்ட ஆசிரமங்களில் நெய் விளக்கேற்றுவோம். நீதி மன்றத்தை நாங்கள் மதிக்கிறோம். பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் ஆதித்யநாத் ஆகியோர் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். ராமர் கோயில் கட்டுவதற்கு அவர்கள் வழி ஏற்படுத்தித் தரவேண்டும்’’ என்றார்.

இந்து அமைப்புகளின் நிகழ்ச்சி கள் மற்றும் முஸ்லிம்களின் எதிர்ப்பு நிகழ்ச்சிகளை முன்னிட்டு பைசா பாத் மற்றும் அயோத்தியாவில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x