Published : 12 Dec 2018 10:13 AM
Last Updated : 12 Dec 2018 10:13 AM

இறுதி முடிவு வெளியானது: ம.பி.யில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை; காங். 114, பாஜக 109

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது, பாஜக 109 இடங்களில் வென்றுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 116 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால், காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் 2 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் போதுமானது. காங்கிரஸ் கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ் கட்சி ஆதரவு தர முன்வந்துள்ளதால், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கோரும் எனத் தெரிகிறது.

மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடந்து, நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இரு கட்சிகளும் சிறிய இடைவெளியில் மட்டுமே சென்றதால், யாருக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்று கூற முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில், இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடந்து அதிகாலையில் முடிந்தது. இதையடுத்து, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை முடிந்து எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதைத் தேர்தல் ஆணையம் இன்று காலை அறிவித்தது.

மத்தியப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரி வி.எல்.காந்தா ராவ் நிருபர்களிடம் கூறுகையில், “ மத்தியப் பிரதேச மாநிலத்தில் 230 தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து 114 இடங்கள் பெற்றுள்ளது. பாஜக 109 இடங்களைப் பெற்றுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும், சமாஜ்வாதிக் கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சை உறுப்பினர்கள் 3 இடங்களிலும் வென்றுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

பாஜக, காங்கிரஸ் இடையே பெரும்பான்மை பெறுவதற்குக் குறைந்த அளவே வித்தியாசம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு 2 உறுப்பினர்கள் ஆதரவும், பாஜகவுக்கு 7 இடங்களும் பற்றாக்குறையாக இருக்கின்றன. இதற்கிடையே பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சி ஆகியவை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தர முன்வந்துள்ளதால் காங்கிரஸ் ஆட்சி அமைக்கக் கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கமல் நாத் இன்று அதிகாலையில் நிருபர்களிடம் கூறுகையில், “ மாநிலத்தில் ஆட்சி அமைக்க எங்களிடம் போதுமான அளவில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். சுயேச்சைகள், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சி ஆதரவு அளிக்கிறார்கள். ஆளுநரிடம் இது குறித்து பேச நேரம் கேட்டுள்ளோம். எங்களிடம் இருக்கும் பெரும்பான்மையை வெளிக்காட்டி, ஆட்சி அமைக்க அழைக்கக் கோருவோம். புதன்கிழமை மாலை வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் ” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் பெரும்பான்மையை அளிக்கவில்லை. ஆட்சி அமைக்கும் அதிகாரம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை, ஆட்சி அமைப்பதற்காக சுயேச்சை உறுப்பினர்களுடன் பேசி வருவதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது.

இது குறித்து பாஜக தலைவர் ராகேஷ் சிங் கூறுகையில், “ காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. சுயேச்சை உறுப்பினர்கள் பாஜகவிடம் பேசி வருகின்றனர். ஆதலால், நாளை ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோருவோம் “ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x