

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முதல்வராகவும் இருந்த காமராஜர் கற்றுக்கொடுத்த பாடங்களை மறந்ததால்தான் காங்கிரஸ் கட்சி பாதிக்கப்பட்டது என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வேதனை தெரிவித்தார்.
அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது. இந்தக் கருத்தரங்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், கபில் சிபல், மணீஷ் திவாரி, சல்மான் குர்ஷித், அபிஷேக் சிங்வி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கருத்தரங்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:
''கடந்த 1963-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் கே. காமராஜர் அப்போது இருந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். அதாவது, கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் அனைவரும் அமைச்சர் பதவியைத் துறந்துவிட்டு, கட்சிப் பணிக்கு வர வேண்டும் என்றார். ஆனால் அதுபோல் காங்கிரஸ் கட்சி காலப்போக்கில் செய்யவில்லை, அதை மறந்ததால்தான் கட்சி பாதிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியால் குறிப்பிட்ட விஷயங்களுக்கு ஏற்றார்போல் வளரமுடியவில்லை என்ற தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நாங்கள் முயற்சிக்கவில்லை.
கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. மத்திய அரசின் பல்வேறு தாக்குதலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி அதிகமான விலை கொடுத்துள்ளது. நாங்கள் எங்களைப் பொறுத்தவரை சிறப்பாகச் செய்தோம். நான் மக்கள் நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை என்று நினைத்தால் அதை நான் ஏற்கிறேன்.
கடந்த 2 ஆண்டுகளாக நாம் காமராஜரின் திட்டத்தைச் செயல்படுவதை மறந்துவிட்டோம். அதாவது, நாம் தொடர்ந்து அமைச்சர்களாகவே இருக்கக் கூடாது. காமராஜர் திட்டத்தின்படி, மூத்த அமைச்சர்கள் தங்கள் பதவியைக் கைவிட்டு கட்சிப் பணிக்குச் செல்ல வேண்டும் என்று முன்வைத்தார்.
காமராஜர் அறிவுரைப்படி, அப்போது அமைச்சர்களாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி, ஜெகஜீவன் ராம், மொரார்ஜி தேசாய், காமராஜர், பிஜு பட்நாயக், எஸ்.கே.பாட்டீல் உள்ளிட்ட 6 முதல்வர்கள் தங்கள் பதவியைத் துறந்தனர்.
காமராஜராலும், ஜவஹர்லால் நேருவாலும் கட்சிக்கு விலைமதிப்புமிக்க பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டது. அந்தப் பாடத்தை நாம் மறந்துவிட்டோம். இதை மறந்ததால்தான் காங்கிரஸ் கட்சி பாதிக்கப்பட்டது. அதேசமயம், பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கிறது. வரும் தேர்தலில் இது நிச்சயம் எதிரொலிக்கும்''.
இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.