ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை: ராணுவம் அதிரடி

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை: ராணுவம் அதிரடி
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீர் சிறீநகரில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர், ஒரு ராணுவ வீரர் காயமடைந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறீநகர்-பந்திப்போரா பகுதியில் இருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ள முஜ்குந்த் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை அந்தக் கிராமத்தைச் சுற்றிவளைத்த ராணுவத்தினர், வீடு வீடாகச் சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ராணுவத்தினரைக் கண்டதும், தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத்தொடங்கினார்கள். இதற்கு ராணுவத்தினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இரவில் தேடுதல் வேட்டையை ராணுவத்தினர் நிறுத்தினாலும், கிராமத்தைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்தனர்.

அதிகாலையில் தேடுதலை ராணுவத்தினர் தீவிரப்படுத்தினார்கள். அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில், 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், தோட்டாக்கள், பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த முஜ்குந்த் ஆப்ரேஷனில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். அவர் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தீவிரவாத தேடுதல் வேட்டை நடத்தத் தொடங்கியவுடன், ஸ்ரீநகர் மாவட்டம் முழுவதும் இன்டர்நெட் சேவையை ராணுவத்தினர் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை.

அந்தக் கிராமத்தில் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்கள் தீவிரமாகச் சோதனையிட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in