

நமது ராணுவத்தை பலவீனமடையச் செய்ய வேண்டும் என்று விரும்பியவர்களுக்கு காங்கிரஸ் கட்சி உதவியுள்ளது. ஆனால், எங்களின் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் எந்தவிதமான இடைத்தரகர் வேலையும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
ரஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் எந்தவிதமான விசாரணையும் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து பிரதமர் மோடி இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் எம்.பி. தொகுதியான ரே பரேலிக்கு இன்று பிரதமர் மோடி சென்றார். முதல் முறையாகச் சோனியா காந்தியின் தொகுதிக்கு சென்றுள்ள மோடி பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்பின் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டின் ராணுவத்தை எந்த முயற்சி எடுத்தாவது வலுவடையச் செய்ய வேண்டும், பலம் பெறவைக்க வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் செயல்படுகிறோம். ஆனால், காங்கிரஸ் கட்சியோ எவ்வளவு செலவு செய்தாவது இந்திய ராணுவம் பலம் அடையக்கூடாது என்று நினைத்தவர்களுடன் நட்பு வைத்திருந்தது.
நாங்கள் ரஃபேல் போர் ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசு எந்தவிதான முறைகேட்டிலும் ஈடுபடவில்லை, வெளிப்படைத்தன்மையாக இருக்கிறது என்று நீதிமன்றம் கூறியது காங்கிரஸ் கட்சியை வெறுப்படையச் செய்திருக்கிறது.
தேசத்துக்கு எதிராகச் செயல்படும் நாடுகளில் இருந்து காங்கிரஸ் கட்சி ஆதரவைக் கோருவதையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். நம்நாட்டுத் தலைவர்கள் சிலர் பேசும் பேச்சுக்கு பாகிஸ்தான் கைதட்டி வரவேற்பதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?
சிலர் எப்போதுமே பொய்களைத்தான் பேசுவார்கள், பொய்களைத் தான் ஏற்றுக்கொள்வார்கள். நாட்டின் பாதுகாப்புத்துறை, பாதுகாப்பு அமைச்சர், விமானப்படை அதிகாரிகள் அனைவரும் அவர்களுக்கு பொய்சொல்பவர்களாகத் தெரிகிறார்கள். பிரான்ஸ் அரசுகூட பொய் உரைக்கும் அரசாக அவர்களுக்கு மாறிவிட்டது. இப்போது, நமது நாட்டின் உச்ச நீதிமன்றம் கூட பொய்கூறுகிறது என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
நாட்டைப்பற்றி அக்கறைகொள்ளாத இவர்கள் என்னமாதிரியான மக்கள். அவர்களுக்கு என்னை வார்த்தைகளால் காயப்படுத்த வேண்டும் என்பது எனக்குத் தெரியும். மோடியை ஊழலில் சிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
உண்மைக்கு ஒருபோதும் அலங்காரம் தேவையில்லை, ஆனால் பொய்கள் அழிந்துவிடும். ராணுவத்தின் மீது காங்கிரஸ் மீதான பார்வையை இந்த நாடு ஒருபோதும் மன்னிக்காது. சிலர் 'பாரத் மாதா கி ஜே' என்ற வாசகத்தைக் கூறுவதற்கே காங்கிரஸ் கட்சியினர் வெட்கப்படுகிறார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்