Last Updated : 03 Dec, 2018 03:14 PM

 

Published : 03 Dec 2018 03:14 PM
Last Updated : 03 Dec 2018 03:14 PM

கத்தரிக்காய் கிலோ 20 பைசா: விரக்தியில் தோட்டத்தையே அழித்த மகாராஷ்டிர விவசாயி

கத்தரிக்காய் கிலோ 20 பைசாவுக்கு விலை போனதையடுத்து, விரக்தி அடைந்த மகாராஷ்டிரா விவசாயி கூடுதல் இழப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஒட்டுமொத்த தோட்டத்தையும் அழித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயம் கிலோ ரூ.1.40 காசுக்கு விலை போனதையடுத்து, அதில் கிடைத்த 1,064 ரூபாயையும் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்தச் சம்பவத்தையடுத்து, இப்போது கத்தரிக்காய் விலை குறைந்ததால் தோட்டத்தையே விவசாயி அழித்துள்ளார்.

அகமது நகர் மாவட்டம், ராஹாதா தாலுகா, சக்குரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர பவாக்கே. இவர் தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கத்தரிக்காய் பயிரிட்டு இருந்தார். இதற்காகக் கத்தரிக்காய் செடிக்குப் பாத்தி அமைத்தல், சொட்டுநீர் பாசனம் அமைத்தல், உரம், பூச்சி கொல்லி மருந்துகள் அடித்தல் என ரூ.2 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.

இந்நிலையில் கத்தரிக்காய் அறுவடை செய்து மொத்தச் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு சென்றபோது, கிலோ 20 பைசாவுக்கு மட்டுமே கத்தரிக்காய் விலை போனது. இதனால், ரூ.2 லட்சம் செலவு செய்த விவசாயி ராஜேந்திராவுக்கு கத்தரிக்காய் மூலம் ரூ.65 ஆயிரம் மட்டுமே கிடைத்தது.

இதனால், விரக்தி அடைந்த ராஜேந்திரா தோட்டத்தில் கத்திரிக்காய் இருந்தால், மேலும் இழப்புதான் ஏற்படும் என்று நினைத்து விரக்தியில் கத்தரிக்காய் செடிகளையும் வேரோடு பிடுங்கி தோட்டத்தை அழித்துவிட்டார்.

இது குறித்து விவசாயி ராஜேந்திர பாவாகே கூறுகையில், “ நான் எனது தோட்டத்தில் 2 ஏக்கரில் கத்தரிக்காய் பயிரிட்டு இருந்தேன். இதற்காக சொட்டுநீர் பாசனம், பூச்சிக்கொல்லி மருந்து, உரம் என ரூ.2 லட்சம் முதலீடு செய்தேன். ஆனால், கத்தரிக்காய் விற்பனைக்குக் கொண்டு சென்றபோது கத்தரிக்காய் கிலோ 20 பைசாவுக்குத்தான் விலைக்கு எடுக்கப்பட்டது, இதனால், ரூ.65 ஆயிரம் மட்டுமே கிடைத்தது.

உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்கிய விதத்தில் ரூ.35 ஆயிரம் கடனை இன்னும் அடைக்கவில்லை. எப்படி எனக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டப் போகிறேன் எனத் தெரியவில்லை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மனதில் விரக்தி ஏற்பட்டு கத்தரிச்செடிகள் அனைத்தையும் பிடுங்கி எறிந்து தோட்டத்தை அழித்துவிட்டேன்.

ஒவ்வொரு வாரமும் கத்திரிக்காயை விலைக்குக் கொண்டு சென்றாலும் முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியவில்லை. இனிமேலும் விவசாயம் செய்ய முடியாது என்பதால் தோட்டத்தை அழிக்க முடிவு செய்தேன். வீட்டில் ஆடு, மாடுகள் இருக்கின்றன. அவற்றை கவனிக்கப் போகிறேன். கத்தரிக்காய் விவசாயம் மீது அதிகமான நம்பிக்கை வைத்திருந்தேன். என் கால்நடைகளையும் எப்படிக் காப்பாற்றுவது எனத் தெரியவில்லை” என கண்ணீருடன் ராஜேந்திர பாவாகே தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x