

ராமர் கோயில்-பாபர் மசூதி வழக்கின் அயோத்தி நிலத்தில் கல்விக்காக பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கருத்து கூறியுள்ளார்.
இது டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாடு எனவும் சிசோடியா தகவல் அளித்தார். இதை அவர் தனது பேட்டியில் இன்று கூறியுள்ளார்.
ராமர் கோயில் விவகாரம் குறித்த கேள்விக்கு சிசோடியா அளித்த பதிலில் கூறும்போது, ''இருதரப்பின் ஒப்புதலுடன் அயோத்தியின் நிலத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும். ராமராஜ்யம் என்பது கல்வியால் அமைக்கப்பட வேண்டுமே தவிர மாபெரும் கோயிலை அமைத்து அல்ல'' எனத் தெரிவித்தார்.
''இந்தப் பல்கலைக்கழகத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் என அனைத்து மதத்தினரும் ஒன்றாக இணைந்து அதில் ராமர் கொள்கையைக் கற்கலாம். இந்திய அரசியலில் பெருகி வரும் சாதி, மதப் பிரச்சினையையும் கல்வியின் மூலம் தான் தீர்க்க முடியும்'' என சிசோடியா தெரிவித்தார்.
உ.பி.யின் அயோத்தியில் ராமர் பிறந்த இடம் எனவும், அங்கு அவருக்கு கோயில் இருந்தது என்பதும் இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதைக் கையில் எடுத்து அரசியல் செய்யும் இந்துத்துவா அமைப்புகளால் அங்கிருந்த பாபர் மசூதி கடந்த டிசம்பர் 6, 1992-ல் இடிக்கப்பட்டது.
இந்த இடத்தில் மீண்டும் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது. இதில் ஆம் ஆத்மி கட்சி அங்கு கோயிலுக்குப் பதிலாக பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என முதன்முறையாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.