

ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்க மத்திய அரசு உத்தரவிடுகிறது. மாநில அரசுகளின் உத்தரவுப்படி ஒட்டுக் கேட்கப்படும் போன்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
‘சாப்ட்வேர் ஃபீரிடம் லா சென்ட்ர்’ என்ற தன்னார்வ சட்ட சேவை அமைப்பு, இந்தியாவில் ஒட்டுக் கேட்கப்படும் போன்கள் குறித்த ஆய்வு நடத்தியது. இதன் அறிக்கை சமீபத்தில் இஸ்தான்புல்லில் நடந்த இன்டர்நெட் கவர்னென்ஸ் போரம் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
அதில், இந்தியாவில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசு அளித்த தகவல்களின் அடிப் படையில், ‘இந்தியாவின் கண் காணிப்பு நிலை’ என்ற தலைப்பில் நடத்திய ஆய்வில் பல தகவல்கள் தெரிய வந்துள்ளன. மேலும் இந்திய அரசுக்காக இன்டர்நெட் கண் காணிப்பு முறையை ஏற்படுத்தித் தர வெளிநாட்டு கம்பெனிகள் உட்பட 26 கம்பெனிகள் ஆர்வமாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக போன் உரையாடலை ஒட்டுக் கேட்டல், சமூக இணைய தளங்கள் குறித்த ஆய்வு, அவற்றில் பரிமாறிக் கொள்ளப்படும் தகவல் களை அவ்வப்போது கண்டறிந்து தெரிவிக்க கம்பெனிகள் முன்வந் துள்ளன.
68 பக்க ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:
இந்தியாவில் சராசரியாக ஆண் டுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போன்களை ஒட்டுக் கேட்க மத்திய அரசு உத்தரவிடுகிறது. தவிர மாநில அரசுகளின் உத்தரவுப்படி கண்காணிக்கப்படும் போன்களின் எண்ணிக்கை அதை விட இரண்டு மடங்காக இருக்கிறது.
இந்திய டெலிகிராப் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின்படி, போன் உரையாடல்கள், குறுந்தகவல்கள், இ மெயில்கள், இன்டர்நெட் நடவடிக்கைகளை கண்காணிக்க புலனாய்வு ஏஜென்சிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.