

காஷ்மீர் மாநிலத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி வாயிலாக ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 3 பேரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் கேரன் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வாயிலாக தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். அப்போது தீவிரவாதிகளுக்கும் - ராணுவத்தினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: "குப்வாரா எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்தது.
இதனையடுத்து குப்வாரா பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது. அப்போது எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன" என்றார்.