Published : 08 Dec 2018 04:43 PM
Last Updated : 08 Dec 2018 04:43 PM

சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தியவர் பிரதமர் மோடி: ராகுல் காந்தி மீண்டும் சாடல்

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட  சர்ஜிக்கல் ஸ்டிரைகிற்கு மிக அதிக  முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக முன்னாள் ராணுவ தளபதி வேதனை தெரிவித்திருந்த நிலையில், இவ்வாறு செய்வது பிரதமர் மோடி தான் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உரி பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடிக்கும் கொடுக்கும் விதமாக அடுத்த சில நாட்களில் இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. அப்போது வடக்குபகுதி ராணுவ தளபதியாக இருந்தவர் ஹூடா. சர்ஜிக்கல் ஸ்டிரைக் வெற்றிகரமாக நடக்க பணியாற்றிய முக்கிய தளபதிகளில் இவரும் ஒருவர். இந்த நிலையில்,

சண்டிகரில் நடந்த விழாவில் பங்கேற்று பேசிய அவர் பேசுகையில் ‘‘எல்லை தாண்டிய ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய தாக்குதல் மிக முக்கியமான நிகழ்வு தான். இது தேவையான தாக்குதல். அதனாலேயே இதனை நடத்தினோம். அதுகுறித்து சந்தேகங்கள் எழுவது இயற்கை தான்.

ஆனால் தொடர்ந்து அதுபற்றி அதிகப்படியாக பேசுவது தேவையற்ற எண்ணங்களை ஏற்படுத்தும். சர்ஜிக்கல் ஸ்டிரைக் ரகசியமாக வைக்கப்பட்டதாலேயே நினைத்ததை விட சிறப்பாக ராணுவம் செயலாற்றியது.

சர்ஜிக்கல் ஸ்டிரைக் மிக அதிகப்படியாக அரசியல் ஆக்கப்பட்டுவிட்டதாக நான் எண்ணுகிறேன். இதுபற்றி பேசும் முன் நாட்டின் நலனை அரசியல்வாதிகள் எண்ணி பார்க்க வேண்டும். ராணுவ செயல்பாடுகள் குறித்தும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்’’ எனக் கூறினார்.

இந்த நிலையில் முன்னாள் ராணுவ தளபதி ஹூடாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘ஹூடா உண்மையான ராணுவ வீரராக பேசியுள்ளார். உங்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது.

ஆனால் திரு. 36 (பிரதமர் மோடி) நமது ராணுவத்தை தனிப்பட்ட சொத்தாக பயன்படுத்துவதற்கு வெட்கப்படுவதில்லை. அவர் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை அரசியல் மூலதனமாக பயன்படுத்தினார். ரபேல் ஒப்பந்தத்தின் மூலம் தற்போது அனில் அம்பானியின் சொத்து மதிப்பை 30 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தி விட்டார்’’ என ராகுல் காந்தி சாடியுள்ளார்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x