சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி படுகொலையை தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீ்ர்ப்பளித்துள்ளது.  

கடந்த 1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப் பட்டார்.  அவர் சீக்கிய காவலர்களால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக புகார் எழுந்தது.

முன்னாள் எம்.பி.யான சஜ்ஜன் குமார் மீது மேற்கு டெல்லியில் உள்ள ஜானக்புரி, விகாஸ்புரி ஆகிய காவல் நிலையங்களில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 1984-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி, சோகன் சிங், அவரது மருமகன் அவதார் சிங் என்ற 2 சீக்கியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஜானக்புரி காவல் நிலையத்திலும் மறுநாள் குர்சரண் சிங் என்ற சீக்கியர் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் விகாஸ்புரி காவல் நிலையத்திலும் சஜ்ஜன் குமாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டன.

விசாரணை நீதிமன்றத்தில் அவர் மீதான குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்டது. காங்கிரஸ் கவுன்சிலர் கோஹர் உள்ளிட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் கோஹனர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமார் குற்றவாளி என அறிவித்ததோடு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சஜ்ஜன் குமார் சரண் அடைய வேண்டும், 5 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் கோஹர் உள்ளிட்டோருக்கு விதித்த தண்டனையையும் டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in