Published : 14 Dec 2018 08:07 AM
Last Updated : 14 Dec 2018 08:07 AM

பாஜகவிடம் ஏனையோர் கற்க வேண்டிய பாடம்

ஒரு சறுக்கலிலிருந்தோ, தோல்வியிலிருந்தோ உடனடியாக வெளியே வருவது எப்படி? உடனடியாக மீண்டும் களத்தில் இறங்க வேண்டும், தவறுகள் எங்கெல்லாம் நிகழ்ந்தன என்று ஆராய வேண்டும், புதிய உத்திகளுடன் மேலும் மேலும் உழைக்க வேண்டும்.

பாஜக தலைவர்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆட்சியில் நடந்த தவறுகளைக் களைய நடவடிக்கைகள் எடுக்கிறார்களோ இல்லையோ, தேர்தல் களத்தில் நடந்த தவறுகளைக் களைய உடனே களம் இறங்கிவிட்டார்கள். மூன்று முறை முதல்வராக இருந்து, மத்திய பிரதேசத்தில் ஆட்சியை இழந்த ஷிவ்ராஜ் சிங் சௌஹான் டெல்லி அரசியல் நோக்கி நகர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் நினைத்தால் மத்திய அமைச்சர் ஆகிவிடலாம். ஆனால், மனிதர் மறுத்துவிட்டார்.

 “மத்திய அரசிலோ கட்சியின் தேசிய அமைப்பிலோ எந்தப் பதவியையும் வகிக்க மாட்டேன். மத்திய பிரதேசத்திலேயே வாழ்ந்து, இங்கேயே மடிவதைத்தான் விரும்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார் சௌஹான். பாஜக தலைவர் அமித் ஷா ஹரியாணாவின் குருக்ஷேத்திரா நகரில் சர்வதேச கீதை மாநாட்டில் வியாழக்கிழமை கலந்துகொண்டிருக்க வேண்டும். தேர்தலில் ஏற்பட்ட சரிவின் விளைவாக, முன்னதாக ஒப்புக்கொண்டிருந்த பல நிகழ்ச்சிகளையும் ரத்துசெய்தவர், இந்நிகழ்ச்சியையும் ரத்துசெய்துவிட்டார்.

டெல்லியிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த அனைத்து நிலை நிர்வாகிகளும் பங்கேற்கும் கூட்டத்தில் தன் கவனத்தைச் செலுத்தியிருக்கிறார். சமீபத்திய தோல்விக்கான காரணங்களை அலசுவதோடு, 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான உத்திகளையும் கலந்தாலோசிக்கும் கூட்டம் இது. கட்சியின் தேசிய நிர்வாகிகள், மாநிலத் தலைவர்கள், வாக்குச்சாவடி மேலாளர்கள் பலரும் பங்கேற்கும் இக்கூட்டம் எவ்வளவு நேரம் நடப்பது தெரியுமா? குறைந்தது ஏழு மணி நேரம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x