

ஐஎஸ் தீவிரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டு, நாட்டில் பல்வேறு நகரங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருந்த 10 பேர் தேசிய புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.அவர்கள் 10 பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
டெல்லி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக ‘ஹர்கத் உல் ஹர்ப் இ இஸ்லாம்’ என்ற அமைப்பை சிலர் உருவாக்கியுள்ளதாகத் தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) ரகசியத் தகவல் கிடைத்தது.
மேலும், இந்த அமைப்பினர் வடமாநிலங்களில் திடீர் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பாக டெல்லியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து 16 இடங்களில் நேற்று தேசிய புலனாய்வுப் பரிவினர் நடத்திய அதிரடி ரெய்டில் முப்தி முகமது சுஹைல் என்ற ஹஸ்ரத் (வயது 29), ராஷித் ஜாபர் ரக் என்கிற ஜாபர் (23), சயீத் (28), ரயிஸ் அகமது, ஜுபைர் மாலிக் (20), ஜியாத் (22), சகிப் இப்திகர் (26), முகமது இர்சத் (20), முகமது ஆசம் (35) ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து கையெறி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள், கை துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள் போன்றவற்றைத் தேசிய புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர். இவர்களில் 5 பேர் உ.பி. மாநிலத்தில் உள்ள அம்ரோகா மாவட்டத்தையும், மீதமுள்ள 5 பேர் டெல்லி கிழக்குப் பகுதியில் உள்ள சீலம்பூர், ஜப்ராபாத் ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 10 பேரையும், தேசிய புலனாய்வுப் பிரிவினர் டெல்லி கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் இன்று நண்பகலில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினார்கள். இவர்கள் 10 பேரின் முகமும் துணியால் மூடப்பட்டு இருந்தது. கைது செய்யப்பட்ட 10 பேரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அமைப்பினருக்கு நீதிபதி அஜய் பாண்டை அனுமதி அளித்தார்.
இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 10 பேரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.