

உர்ஜித் படேலின் ராஜினாமா வங்கித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு ஈவுத்தொகை வழங்கும். அந்த வகையில் இந்த ஆண்டு மத்திய அரசுக்கு ஈவுத்தொகையாக ரூ.50 ஆயிரம் கோடி வழங்க உள்ளது. ஆனால், ரிசர்வ் வங்கியிடம் உபரிநிதியாக இருக்கும் ரூ.3.50 லட்சம் கோடியை தனது நிதிப்பற்றாக்குறையைச் சரி செய்து கொள்வதற்காக கேட்டு, மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகின.
இந்த விவகாரத்தால் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கும், நிதி அமைச்சகத்துக்கும் இடையே உரசல் ஏற்பட்டதாகவும், கடந்த மாதம் 19-ம் தேதி நடந்த வாரியக் கூட்டத்தில் அவர் ராஜினாமாவை அறிவிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவித்தன. பின்னர் அவர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இதைத்தொடர்ந்து வாரியக்கூட்டம் சுமுகமாக நடந்தது.
இந்நிலையில் உர்ஜித் படேல் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதுகுறித்து உர்ஜித் படேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடியாக விலகுகிறேன். இது உடனடியாக அமலுக்கு வருகிறது’’ எனத் தெரிவித்துள்ளார். எனினும் பதவி விலகலுக்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் உர்ஜித் படேல் ராஜினாமா குறித்து மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ''ரிசர்வ் வங்கியில் உறுதித்தன்மையை ஏற்படுத்தியவர் உர்ஜித் படேல். அவரின் ராஜினாமா வங்கித்துறைக்கு பேரிழப்பு. ரிசர்வ் வங்கி துணை ஆளுநராகவும், ஆளுநராகவும் 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். வங்கிகளில் ஒழுங்கமைப்பை ஏற்படுத்தி அதனை உறுதியும் செய்தார் உர்ஜித் படேல்'' என்று மோடி தெரிவித்துள்ளார்.