Published : 12 Dec 2018 04:39 PM
Last Updated : 12 Dec 2018 04:39 PM

‘‘தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’’ - 13 ஆண்டுகளுக்கு பின் பதவி விலகிய சிவராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேச மாநில தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என பதவி விலகிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடந்து, நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் 230 தொகுதிகளுக்கும் நடந்த வாக்கு எண்ணிக்கையில் 114 இடங்களைப் பெற்று காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பாஜக 109 இடங்களைப் பெற்றுள்ளது. இதையடுத்து பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கபோவதாக காங்கிரஸ் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து மத்திய பிரதேச முதல்வர் பதவியில் இருந்து சிவராஜ் சிங் சவுகான் விலகினார். மத்திய பிரதேச ஆளுநரை சந்தித்து ராஜினமா கடிதத்தை வழங்கிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூடுதல் வாக்குகள் பெற்றுள்ள போதிலும், காங்கிரஸை விட குறைவான இடங்களே பெற்றுள்ளோம். எங்களை எதிர்க்கட்சியாகவே மக்கள் அங்கீகரித்துள்ளனர். எனவே பதவியில் இருந்து விலகியுள்ளேன். மக்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கு நன்றி. தேர்தலில் வெற்றி காங்கிரஸ் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத்துக்கு எனது வாழ்த்துக்கள். எனது பணியை செய்யும்போது எதிரே வெற்றியோ அல்லது தோல்வியே எது வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்கிறேன். இந்த தோல்வியையும் ஏற்கிறேன். தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு நானே முழு பொறுப்பேற்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

மத்திய பிரதேச அரசியல் வட்டாரத்தில் ‘மாமாஜி’ என அழைக்கப்படும் சிவராஜ் சிங் சவுகான், அனைத்து அரசியல் கட்சியினரிடமும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர். 59 வயதாகும் அவர், 2005-ம் ஆண்டு பாஜகவில் நெருக்கடியான காலத்தில் முதல்வர் பொறுப்பை ஏற்றார்.

2003-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வென்றபோது உமா பாரதி முதல்வரானார். ஆனால் கலவர வழக்கை காட்டி அவர் பதவி விலகும் சூழல் ஏற்பட்டதால் பாபுலால் கவுர் முதல்வரானார். ஆனால் அவரை பதவியில் இருந்து நீக்கக் கோரி உமா பாரதி போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து இருவரையும் ஒதுக்கி விட்டு இரண்டாம் கட்டத் தலைவராக சிவராஜ் சிங் சவுகானை முதல்வர் பதவியில் அமர்த்தியது கட்சித் தலைமை.

ஆனால் தனது சாதுர்யத்தால் தொடர்ச்சியாக அடுத்து இரண்டு தேர்தல்களில் பாஜகவுக்கு வெற்றியை தேடி தந்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் முதல்வர் பதவியில் அமர்ந்த பெருமையை பெற்றார். அதேசமயம் இவரது ஆட்சிக்காலத்தில் தான் தேர்வுத்துறையை கலக்கிய வியாபம் ஊழல் முக்கியமானது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x